கோடநாடு வழக்கில் ஏன் பயம்?- மறுவிசாரணை செய்வதில் தவறில்லை: சரத்குமார் பேட்டி
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், குற்றம் புரிந்தவர்கள் யார் என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டியது அவசியம், எனவே இந்த வழக்கை மறு விசாரணை செய்வதில் தவறில்லை, என சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.
சமத்துவ மக்கள் கட்சியின் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் என்.எஸ்.நாதன் இல்லத் திருமண விழாவில் பங்கேற்கத் திண்டுக்கல் வந்த சமத்துவ மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் சரத்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
’’திமுக அரசு பதவியேற்று ஆறு மாதங்கள் ஆன பிறகுதான் அவர்களின் செயல்பாடுகள் குறித்துக் கருத்துக் கூற முடியும். கடந்த ஆட்சியின்போது செயல்பட்டதைவிட என்ன, என்ன சீர்திருத்தங்களை செய்ய வேண்டும் என நினைக்கிறார்களோ அவற்றைச் செய்ய அவர்களுக்கு ஆறு மாத காலம் அவகாசம் தேவைப்படும். அதன் பிறகே திமுக ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து கருத்துக் கூறமுடியும்.
மத்திய அரசு தமிழக முதல்வரின் தேவையான கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள செவிசாய்க்க வேண்டும். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அசம்பாவிதங்கள் நடந்திருப்பது உண்மை. அதை யாராலும் மறுக்க முடியாது, மறக்கவும் முடியாது. கோடநாடு வழக்கில் மறுவிசாரணை நடத்தப்படும் என்பதற்கு ஏன் பயப்படவேண்டும். நியாயமான முறையில் எல்லோரும் விசாரிக்கப்பட வேண்டியதுதான்.
இந்த வழக்கில் குற்றம் புரிந்தவர்கள் யார் என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டியது அவசியம். எனவே இந்த வழக்கை மறுவிசாரணை செய்வதில் தவறில்லை என நினைக்கிறேன்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு பற்றிய விசாரணை குறித்து முதல்வர்தான் பதில் சொல்லவேண்டும். நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தொண்டர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். உள்ளாட்சி தேர்தலைக் கட்சிக்கு அப்பாற்பட்டதாகப் பார்க்கிறேன். நேரடியாக மக்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் போட்டியிடுவர். கூட்டணி குறித்து தொண்டர்களின் கருத்துகளைக் கேட்ட பிறகே முடிவு செய்யப்படும்’’.
இவ்வாறு சரத்குமார் தெரிவித்தார்.
