

நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதான ஹெலிகாப்டர் சகோதரர்களுக்கு எங்கெல்லாம் சொத்துக்கள் உள்ளன? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கும்பகோணத்தைச் சேர்ந்த ஹெலிகாப்டர் பிரதர்ஸ் எம்.ஆர்.கணேசன், எம்.ஆர்.சுவாமிநாதன். இவர்கள் பாஜகவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் மீது நிதி நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து கணேசன், சுவாமிநாதன், அகிலாண்டம், வெங்கடேசன் உட்பட 7 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் சிறையில் உள்ள அகிலாண்டம், வெங்கடேசன் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜாமீன் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு சார்பில் மனுதாரர்கள் மீதான வழக்கு, விரைவில் பொருளாதாரக் குற்றப் பிரிவுக்கு மாற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, மனுதாரர்கள் மீதான நிதி நிறுவன மோசடி தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? நிதி நிறுவன மோசடியில் தொடர்புள்ளவர்களுக்கு எங்கெல்லாம் சொத்துகள் உள்ளன? எத்தனை சொத்துகள் அடையாளம் காணப்பட்டுள்ளன? இவர்களுக்கு குவைத், மலேசியாவில் நிறுவனங்கள் உள்ளதா? என்பது குறித்து போலீஸ் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை செப். 16-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.