

மத்திய அரசு நேற்று தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட்டை தமிழகத்தைச் சேர்ந்த சில அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்றுள்ளனர். சிலர் ஏமாற்றம் அளிப்பதாக கூறியுள்ளனர்.
இதுகுறித்து அரசியல் கட்சி தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகள்:
தேமுதிக தலைவர் விஜயகாந்த்:
ரயில் டிக்கெட் முன்பதிவில் மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடும், முதியோருக்கான கூடுதல் சலுகையும் வரவேற்கத்தக்கது. தமிழகத்தில் சேலம் ரயில்வே கோட்டம் விரிவாக்கம், தென் மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் இரட்டை ரயில் பாதை, மின்மயமாக்கல் திட்டம் ஆகியவை இடம்பெறாதது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.
பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்:
தமிழகத்துக்கு புதிய வழித்தடங்கள் நிறைவேற்றப்படவில்லை எனும் விமர்சனங்கள் வருகின்றன. ஆனால், கட்டணத்தை உயர்த்தாமல், சுமையை அதிகரிக்காமல் சுகமான சுத்தமான பயணத்துக்கு வழிவகை செய்துள்ள பட்ஜெட்.
பாமக நிறுவனர் ராமதாஸ்:
ரூ.134 கோடி செலவில் தருமபுரி-மொரப்பூர் இணைப்புப் பாதை திட்டம், 100 ரயில் நிலையங்களில் இலவச வை-ஃபை வசதி, குழந்தைகளுக்கான உணவு பெறும் வசதி திட்டம் ஆகியவை வரவேற்கத்தக்கவை. அதேசமயம் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்களில் பெரும்பாலானவை இன்னும் செயல்படுத்தப்படவில்லை. தமிழகத்துக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 19 திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. கொஞ்சம் மகிழ்ச்சி நிறைய ஏமாற்றங்களை தாங்கிய நிதிநிலை அறிக்கை இது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன்:
பொதுமக்கள் விரும்பும் வகையில் விரைவு ரயில்கள், தரமான ரயில் பெட்டிகள், சுத்தமான கழிப்பறைகள், பாதுகாப்பான பயணம், நவீன வசதிகளுக்கு பட்ஜெட்டில் எவ்வித அறிவிப்பும் இல்லை. சென்னை, மாமல்லபுரம், புதுச்சேரி, கடலூர் வழித்தடத்தில் ரயில் திட்டம் தொடங்குவதற்கான ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளவில்லை. தமிழகம் தொடர்ந்து 2 ஆண்டுகளாக வஞ்சிக்கப்பட்டு வருகிறது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ:
தமிழகத்துக்காக ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. ரயில்வே துறை கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிக்காக எல்ஐசி நிறுவனம் மற்றும் தனியார் பங்களிப்பு, அயல்நாட்டு நேரடி முதலீடு மூலம் நிதி திரட்டப்படும் என ஏற்கெனவே அரசு அறிவித்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறையான ரயில்வேயை படிப்படியாக தனியார்மயத்தை நோக்கி அரசு தள்ளுகிறது.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன்:
தமிழகத்தில் பயணிகள் போக்குவரத்துக்கான புதிய ரயில் திட்டங்கள், ரயில் பாதைகள் அறிவிப்பு இல்லை. ராயபுரம் ரயில் முனையத்தை நடைமுறைப்படுத்துவது குறித்த உறுதியான அறிவிப்பு இல்லை. இந்த பட்ஜெட் தமிழக மக்களின் எண்ணங்களையும், எதிர்பார்ப்புகளையும் பிரதிபலிக்க வில்லை.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் ஜி.ராமகிருஷ்ணன்:
கடந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு 50 சதவீத நிதியை மட்டுமே மத்திய அரசு செலவு செய்துள்ளது. இந்த நிலையில் நடப்பாண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் அமலாவதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. இந்த ரயில்வே பட்ஜெட் தொழில் வளர்ச்சிக்கும், மக்கள் நலனுக்கும் உதவாது.
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:
சில அம்சங்களைத் தவிர வேறு சிறப்பம்சங்கள் இல்லாத சாதாரணமான பட்ஜெட்.
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா:
தமிழகத்துக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ள பட்ஜெட்.