Published : 09 Sep 2021 11:20 AM
Last Updated : 09 Sep 2021 11:20 AM

கூவம் ஆற்றின் முகத்துவாரத்தில் மணல் திருட்டு புகார்: கமல் விமர்சனம்

கூவம் ஆற்றின் முகத்துவாரத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக மணல் திருட்டு நடப்பதாக, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக, கமல்ஹாசன் இன்று (செப். 09) வெளியிட்ட அறிக்கை:

"கூவம் ஆற்றின் முகத்துவாரத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக அனுமதி இல்லாமல் மணல் திருட்டு நடந்துவருவதை ஆங்கில நாளிதழ் ஒன்று அம்பலப்படுத்தியுள்ளது.

ஐம்பதாண்டுகளாகத் தமிழகத்தில் நிகழ்வதுதானே, இதில் என்ன ஆச்சர்யம்? இந்த மணல் கொள்ளை நடப்பது தலைமைச் செயலகத்திலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் நாற்புறமும் அரசு அலுவலகங்கள் உள்ள பகுதியில். ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் சாலையின் வழியாக லாரி லாரியாக மணல் அள்ளப்பட்டு வந்துள்ளது. பொதுப்பணித்துறை சிறப்பான முறையில் வேடிக்கை பார்த்துள்ளது.

மிக மிகக் குறைந்தபட்ச மதிப்பு வைத்துக் கணக்கிட்டாலும் நாளொன்றுக்கு சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான மணல் ஏப்பம் விடப்பட்டுள்ளது. வருடத்துக்கு சுமார் 11 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு.

இவையெல்லாவற்றையும் விட பெரும்கொடுமை என்னவென்றால், இந்த மணல் கட்டுமானத்துக்கு உகந்தது அல்ல. இம்மணலைக் கொண்டு கட்டிடம் கட்டினால் நிச்சயம் இடிந்து விழுந்துவிடும் என்கிறார்கள் கட்டுமான நிபுணர்கள். அப்படியெனில், இந்த மணலை அள்ளிக் கட்டிடங்கள் கட்டிய மகானுபாவர்கள் யார்? அவற்றைப் பயன்படுத்தப் போவது யார்? அதில் வாழப் போகிற மக்களின் உயிருக்கு யார் பொறுப்பு?

கூவம் கடலுடன் இணையும் பகுதியில் மணல் அள்ளப்படுவதால் சூழலியல் மிக மோசமாக அழிந்துவருகிறது என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ச்சியாக எச்சரித்து வருகிறார்கள்.

அனுமதி இல்லாமல் திருடுகிறார்களே என்று வருந்துவதா? அரசுக்கு வருவாய் இழப்பு என்று வருந்துவதா? அரசு இயந்திரம் உறங்கிக் கொண்டிருக்கிறதே என்று வருந்துவதா? ஆட்சி மாறினாலும் மணல் திருட்டு தொடர்கிறதே என வருந்துவதா? சூழியல் சீரழிகிறதே என்று வருந்துவதா? இந்த மண்ணில் கட்டப்படும் கட்டிடங்களால் ஏற்படப் போகும் உயிர்ப் பலிகளை எண்ணி வருந்துவதா?".

இவ்வாறு கமல் கேள்வி எழுப்பியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x