Published : 09 Sep 2021 09:44 AM
Last Updated : 09 Sep 2021 09:44 AM

புலமைப்பித்தன் மறைவு; இலக்கியமும் கலையும் இரு கண்களாகக் கொண்டவர்: கமல் இரங்கல்

புலமைப்பித்தன்: கோப்புப்படம்

சென்னை

புலவர் புலமைப்பித்தன் மறைவுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் முன்னாள் சட்ட மேலவைத் துணைத் தலைவராகவும், அரசவைக் கவிஞராகவும், அதிமுக அவைத் தலைவராகவும் பல்வேறு பதவிகளை வகித்தவர் புலவர் புலமைப்பித்தன். சமீபத்தில் வயது முதிர்வின் காரணமாக உடல்நலம் குன்றியிருந்த புலமைப்பித்தன், சென்னை அடையாறு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சைப் பலனின்றி நேற்று (செப். 08) காலை உயிரிழந்தார்.

அவருடைய மறைவுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கமல்ஹாசன் இன்று (செப். 09) வெளியிட்ட இரங்கல் செய்தி:

"பாரதிதாசப் பரம்பரையில் தொடங்கி, பாடலாசிரியராகப் பரிணமித்தவர்களில் முக்கியமானவர் புலமைப்பித்தன். 'நான் யார், நான் யார்' என்கிற தத்துவக் கேள்வியோடு திரைப்பட வாழ்வைத் தொடங்கியவர், தான் யார் என்பதை அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்துவிட்டு மறைந்திருக்கிறார்.

காதல் பாடல்களுக்காக ரசிகர்களால் அதிகமாக விரும்பப்பட்ட கவிஞராக இருந்தார். நள்ளிரவு துணையிருக்க இருவர் மட்டும் தனியிருக்கும் விரக நிலையில் சாட்சிக்கு ஆயிரம் நிலவுகளை அழைத்து, காதலுக்குள் கவிதையைப் பொதிந்துவைத்த இவரது பாணி, அடிமைப்பெண்ணில் இருந்தே அழகு சொட்டியது.

காதலில் புனிதம் என்ற ஒன்றை ஏற்றிவைக்கும் போக்கு இருந்த காலத்தில், காதலில் காமத்தைத் தள்ளிவைக்கக் கூடாது என்கிற தனித்துவத்தைப் பேணியவர் புலமைப்பித்தன். இவர் எழுதிய காதல் பாடல்களில் காமத்துப் பால், இலை மறைக்காத காயாகத் துலங்கும்.

கமல்: கோப்புப்படம்

தலைமுறை தாண்டி பாடல் செய்தவர் 'நாயகன்' படத்தில் எல்லாச் சூழல்களிலும் கொடி நாட்டினார். 'கடலலை யாவும் இசைமகள் மீட்டும் அழகிய வீணை ஸ்வரஸ்தானம்' என்று இசைத்தபடி இருந்தவர், 'எனது உலகில் அஸ்தமனம் ஆவதில்லை' என்று இன்னொரு பாடலில் சொன்னார்.

இலக்கியமும் கலையும் இரு கண்களாகக் கொண்ட கவிஞருக்கு அஸ்தமனம் இல்லைதான்.

புலமைப்பித்தனுக்கு என் அஞ்சலிகள்''.

இவ்வாறு கமல் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x