Published : 09 Sep 2021 03:13 AM
Last Updated : 09 Sep 2021 03:13 AM

நான் திமுக உறுப்பினர்; அடையாள அட்டை உள்ளது: உயர் நீதிமன்றத்தில் விழுப்புரம் எம்பி. ரவிக்குமார் பதில் மனு

சென்னை

‘நான் திமுக உறுப்பினர், வேட்புமனு தாக்கல் செய்தபோது எனதுபெயர் திமுக உறுப்பினர் பட்டியலில் உள்ளது’ என்று உயர் நீதிமன்றத்தில் விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவரான வழக்கறிஞர் எம்.எல்.ரவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2019-ம் ஆண்டு தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது:

மக்களவைத் தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த டி.ரவிக்குமார், நாமக்கல் தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பி.சின்னராஜ், ஈரோடு தொகுதியில் மதிமுகவின் ஏ.கணேசமூர்த்தி, பெரம்பலூர் தொகுதியில் இந்திய ஜனநாயக கட்சியின் டி.ஆர்.பாரிவேந்தர் ஆகியோர் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்பி.க்களாகி உள்ளனர். தேர்தல் நடத்தை விதிகளின்படி ஒரு கட்சியில் உறுப்பினராக உள்ள ஒருவர், அந்த கட்சியிலிருந்து விலகாமல் மற்றொரு அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவது சட்டவிரோதம். ஒரு கட்சியில் பொறுப்பு வகித்துக் கொண்டு மற்றொரு கட்சி சின்னத்தில் போட்டியிட சட்டத்தில் இடமில்லை.

எனவே, திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இந்த எம்பி.க்களின்வெற்றி செல்லாது என அறிவிக்கவேண்டும். இதேபோல கூட்டணிகட்சியினர் அதிமுக கட்சி சின்னத்தில் போட்டியிட்டதும் செல்லாது. இந்த வேட்புமனுக்களை தேர்தல் அதிகாரி ஏற்றுக்கொண்டது தவறு. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இந்த 4 எம்பி.க்கள், தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட எம்பி.க்கள், தேர்தல் ஆணையம், திமுக,அதிமுக தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு இருந்தது. இந்த வழக்கில் ஏற்கெனவே கணேசமூர்த்தி எம்பி., தான் திமுக உறுப்பினர் என பதில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரைத் தொடர்ந்து தற்போது விழுப்புரம் எம்பி., ரவிக்குமார் உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், ‘நான் திமுக உறுப்பினர். மனுதாரர் நான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவன் என்றஅனுமானத்தின்பேரில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலின்போது திமுக உறுப்பினர் என்ற அடிப்படையில்தான் பாரம்-பி பூர்த்தி செய்து வழங்கப்பட்டுள்ளது. திமுக உறுப்பினர் என்பதற்கு ஆதாரமாக திமுக உறுப்பினர்பட்டியலில் எனது பெயர் உள்ளது. அதற்கான அடையாள அட்டையும் உள்ளது.

மேலும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தேர்தல் வெற்றியை எதிர்த்து தேர்தல் வழக்கு மட்டுமே தொடர முடியும். மனுதாரர் விளம்பரநோக்கில் பொதுநல வழக்காக தொடர்ந்துள்ளதால் இந்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்’ என கூறியுள்ளார்.

எழுத்தாளர் டி.ரவிகுமார், 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் விசிக சார்பில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் இருந்து எம்எல்ஏ.வானார். விசிக பொதுச்செயலராக இருந்த அவர், 2019 மக்களவைத் தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்றார். அதன்பிறகு அவர் விசிக பொதுச்செயலர் என்று எங்கும் குறிப்பிடுவதில்லை. விசிகவினரும் அவரை விழுப்புரம் எம்பி. என்றே குறிப்பிடுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x