Published : 09 Sep 2021 03:14 AM
Last Updated : 09 Sep 2021 03:14 AM

ரோவர் கருவிகளை வைத்து கோயில் நிலங்களை அளவிடும் பணி சென்னையில் தொடக்கம்: அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்

இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான நிலங்களை நவீன ரோவர் கருவிகளைப் பயன்படுத்தி அளவீடு செய்யும் பணியை சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று தொடங்கிவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:

தமிழகம் முழுவதும் கோயில்களுக்குச் சொந்தமான 4.78 லட்சம் ஏக்கர் நிலங்கள், ரோவர் கருவிகள் மூலம் அளவிடப்பட உள்ளன. இதற்குத் தேவையான 50 கருவிகளுக்கு வருவாய்த் துறை ரூ.4 கோடி வழங்கியுள்ளது. தேவைப்பட்டால் கூடுதல் கருவிகள் பெறப்படும். இதன்மூலம் எளிய முறையில் வரைபடங்களை உருவாக்கி, கோயில்களின் வருமானத்தை அதிகரிக்க முடியும்.

முதற்கட்டமாக சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 61.99 ஏக்கர் நிலம் அளவிடப்படும். இதைத்தொடர்ந்து ஓராண்டுக்குள் அனைத்து கோயில் நிலங்களும் முழுமையாக அளவிடப்படும்.

அரசியல் களத்தில் நாங்களும் இருக்கிறோம் என்பதைக் காட்டவே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எதாவது பேசி வருகிறார். மதத்தை வைத்து பாஜக அரசியல் செய்கிறது. ஆனால், மதம், இனம், மொழி என அனைத்தையும் கடந்து எல்லாரையும் அரவணைக்கும் முதல்வராக ஸ்டாலின் உள்ளார்.

விநாயகர் சதுர்த்தியை வீட்டில் வைத்துக் கொண்டாட பிரதமர் மோடிதான் அறிவுறுத்தியுள்ளார். நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த மத்திய அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளைத் தமிழகம் கடுமையாக கடைபிடிக்கிறது.

தற்போதைய சூழ்நிலையில் தொற்று பரவுவதைத் தடுப்பதே முதன்மையான பணியாகும். இதில் அரசியல் எதுவுமில்லை. அனைவரும் வீட்டிலிருந்தே விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட வேண்டும். இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x