விநாயகர் சிலைகள் தொடர்பாக இந்து அமைப்பு நிர்வாகிகளுக்கு போலீஸ் அதிகாரிகள் அறிவுரை

விநாயகர் சிலைகள் தொடர்பாக இந்து அமைப்பு நிர்வாகிகளுக்கு போலீஸ் அதிகாரிகள் அறிவுரை
Updated on
1 min read

விநாயகர் சதுர்த்தியன்று இந்து அமைப்புகள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் சார்பில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விநாயகர் சிலைகளை நிறுவி வழிபடுவதும், பின்னர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது.

ஆனால் இந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பாஜக மற்றும் இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலின் அறிவுரையின்பேரில் கூடுதல் காவல் ஆணையர்கள் லோகநாதன் (தலைமையிடம்), செந்தில் குமார் (வடக்கு), என்.கண்ணன் (தெற்கு), பிரதீப் குமார் (போக்குவரத்து) ஆகியோர் 20-க்கும் மேற்பட்ட இந்து அமைப்பின் நிர்வாகிகளை நேற்று மாலை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்துக்கு நேரில் அழைத்து அவர்களுடன் ஆலோசனை நடத்தினர். கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை அனைவரும் பின்பற்றி அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அறிவுரை வழங்கினர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, “தனிநபர்கள் தங்களது வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், தனிநபர்களாக சென்று அருகில் உள்ள நீர் நிலைகளில் சிலைகளை கரைப்பதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னையில் சாந்தோம் முதல் நேப்பியர் பாலம் வரையிலான வழித்தடத்தில் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் சிலை கரைப்பு செயல்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in