ரியல் எஸ்டேட் அதிபருக்கு கொலை மிரட்டல்: விசிக நிர்வாகி உட்பட 20 பேர் மீது வழக்கு

ரியல் எஸ்டேட் அதிபருக்கு கொலை மிரட்டல்: விசிக நிர்வாகி உட்பட 20 பேர் மீது வழக்கு
Updated on
1 min read

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் அசோக்குமார். இவர், சென்னையைச் சேர்ந்த மதன் பிரபு, அவரது மனைவி நித்யா ஆகியோருடன் இணைந்து, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மதுராந்தகம், கருங்குழி ஆகிய பகுதிகளில் நிலம் வாங்கி அதை வீட்டுமனைகளாக மாற்றி விற்பதற்கான முயற்சிகளை செய்து வந்தார்.

ஆனால், இவர்கள் எதிர்பார்த்தபடி அந்த மனைகள் சரிவர விற்கவில்லை. இதனால் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து மதன் பிரபு, நித்யா இருவரும் தங்களுடைய பங்குத் தொகையுடன் கூடுதல் தொகை கேட்டதாகத் தெரிகிறது. அப்போது இவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது.

இதனால் மதன் பிரபு, நித்யா ஆகியோர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செங்கல்பட்டு தெற்கு மாவட்டச் செயலராக இருக்கும் ஆனந்த் என்ற ஆதவனை அணுகியுள்ளனர். இதுதொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் முடிவுகள் எட்டப்படவில்லை.

இந்நிலையில் நேற்று மதன் பிரபு, இந்தப் பிரச்சினையை சுமூகமாக பேசித் தீர்த்துக் கொள்ள, அசோக்குமாரை ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே வருமாறு அழைத்துள்ளார். அசோக்குமார் அங்கு சென்றபோது விசிக மாவட்டச் செயலர் ஆனந்த் மற்றும் அவருடைய கூட்டாளிகள் சிலர் அங்கிருந்துள்ளனர். அவர்கள் அசோக்குமாரிடம் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபட்டதுடன், பணத்தை கொடுத்து விடும்படி மிரட்டியதாக கூறப்படுகிறது.

உடனே அசோக்குமார் போலீஸ் அவசர உதவி எண் 100-ஐ அழைத்துள்ளார். போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றபோது அங்கிருந்தவர்கள் தப்பிவிட்டனர். அசோக்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் விசிக மாவட்டச் செயலர் ஆனந்த், மதன் பிரபு, அவரது மனைவி நித்யா உட்பட 20 பேர் மீது அச்சிறுப்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in