Published : 19 Feb 2016 02:58 PM
Last Updated : 19 Feb 2016 02:58 PM

ரூ.37 வெள்ள நிவாரணம்: முதல்வரின் நிதிக்கே திருப்பி அனுப்பிய தூத்துக்குடி விவசாயிகள்

தூத்துக்குடி மாவட்டம் காடல்குடி பகுதியில் மழை வெள்ளத்தால் பயிர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு சார்பில் ரூ.37 மட்டுமே நிவாரணத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. தங்களை அரசு கேவலப்படுத்திவிட்டதாக கூறி, அந்தப் பணத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கே விவசாயிகள் அனுப்பி வைத்தனர்.

கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் வட்டங்களில் வடகிழக்கு பருவமழையால் பல லட்சம் ஏக்கர் உளுந்து, பாசிப்பயறு, மக்காசோளம், வெங்காயம், பருத்தி, மல்லி பயிர்கள் பாதிக்கப்பட்டன.

பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு அரசு சார்பில் வெள்ள நிவாரணம் அறிவிக்கப்பட்டது. வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, வருவாய் துறை அலுவலர்கள் கணக்கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையில் விவசாயிகளுக்கு நிவாரண நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டன.

விளாத்திகுளம் வட்டம் காடல்குடி, ராமச்சந்திராபுரம் வருவாய் கிராமங்களில் வெங்காயம் சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.

காடல்குடி, மிட்டாவடமலாபுரம், மல்லீஸ்வரபுரம் கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்கள் வங்கி கணக்கை பார்த்தபோது, அதில் வரவாகியிருந்த நிவாரணத் தொகையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.196, ரூ.148, ரூ.46, ரூ.37 என மிகவும் குறைந்த அளவே பணம் வெள்ள நிவாரண நிதியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் சுமார் 50 விவசாயிகளுக்கு இவ்வாறு ரூ.500-க்கும் குறைவான பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது.

அரசு தங்களை கேவலப்படுத்திவிட்டதாக கூறி, அந்த பணத்தை காடல்குடி தபால் நிலையம் மூலம் அப்படியே தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு விவசாயிகள் அனுப்பி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x