

பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அவினாசி - அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அவினாசி - அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றக்கோரி விவசாயிகள், தொழில்முனைவோர், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவினாசி - அத்திக்கடவு திட்டத்தை செயல்படுத்தினால் மேட்டுப்பாளையம் அருகில் உள்ள பில்லூர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய 3 மாவட்டங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயத்துக்கு பயன்படுத்த முடியும், சுமார் 50 லட்சம் பேர் பயனடைவர். இதனால் இப் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டமும் உயரும். எனவே, இத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான அறிவிப்பை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும்'' என்று வாசன் தெரிவித்துள்ளார்.