தடுப்பூசி போடாவிட்டால் கடைகள் மூடப்படும்: நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

தடுப்பூசி போடாவிட்டால் கடைகள் மூடப்படும்: நகராட்சி ஆணையர் எச்சரிக்கை
Updated on
1 min read

திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வியாபாரிகள், பணியாளர்கள் செப்டம்பர் 11-ம் தேதிக்குள் தடுப்பூசி போடாவிட்டால் கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் ஏகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா பரவல் படிப்படியாகக் குறைந்து வந்தாலும், நோய்ப் பரவல் அதிகரிப்பதைத் தடுக்கவும், 3-வது அலையைத் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. மாவட்ட எல்லைப்பகுதியில் சோதனைச்சாவடி அமைத்து வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் வருவாய்த் துறை மற்றும் சுகாதாரத்துறையினர் மூலம் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

குறிப்பாகக் கேரளாவில் இருந்து வருவோர் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு, அவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பெரிய மற்றும் சிறு வியாபாரிகள், சாலையோர வியாபாரிகள், ஜவுளிக்கடைகள், பாத்திரக்கடைகள், பழக்கடைகள், உணவகம், தேநீர், மளிகைக்கடைகள், ஜெனரல் ஸ்டோர்ஸ், நகைக்கடைகள், அடகுக் கடைகள், அரிசிக் கடைகள் என எதுவாக இருந்தாலும் அதன் உரிமையாளர்கள், கடையில் பணியாற்றி வரும் ஊழியர்கள் என அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என நகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திருப்பத்தூர் நகராட்சி ஆணையர் ஏகராஜ், நகராட்சி சுகாதார ஆய்வாளர் விவேக் மற்றும் நகராட்சி ஊழியர்கள் திருப்பத்தூர் பஜார் பகுதி, மார்க்கெட் பகுதிகளில் ஒலிப்பெருக்கி மூலம் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வியாபாரிகள் முன்வரவேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் திருப்பத்தூர் நகராட்சி ஆணையர் ஏகராஜ் கூறும்போது, ‘‘திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வியாபாரம் செய்து வரும் அனைத்து வகையான வியாபாரிகள், கடை உரிமையாளர்கள், கடைகளில் பணியாற்றி வரும் பணியாளர்கள் என அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்தி, அதற்கான சான்றிதழைக் கையில் வைத்திருக்க வேண்டும். இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் செப்டம்பர் 11-ம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணிக்குள் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். இதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூடுதல் கூட்டரங்கில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இம்முகாமில் வியாபாரிகள் தங்கள் ஊழியர்களுடன் கலந்துகொண்டு ஆதார் எண், செல்போன் எண்ணை வழங்கி 18 வயதைக் கடந்த அனைவரும் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். திங்கட்கிழமை முதல் நகராட்சி அதிகாரிகள் ஒவ்வொரு பகுதியாக ஆய்வுக்கு வரும்போது தடுப்பூசிப் போட்டுக்கொண்டதற்கான சான்றிதழை அவர்களிடம் வியாபாரிகள் காட்ட வேண்டும்.

இல்லையென்றால் அந்தக் கடையை மூடி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற நிகழ்வுகளைத் தவிர்க்க ஒவ்வொரு வியாபாரியும் சமூக அக்கறையுடன், தங்களது பாதுகாப்பையும், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பையும் உணர்ந்து கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வரவேண்டும். தடுப்பூசியால் எந்தப் பக்க விளைவும் இல்லை என்பதை அனைவரும் உணர வேண்டும்’’ என்று நகராட்சி ஆணையர் ஏகராஜ் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in