Published : 08 Sep 2021 05:10 PM
Last Updated : 08 Sep 2021 05:10 PM

சிறுபான்மையினர் நல கல்லூரி விடுதிகளில் நூலகம்: அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் வெளியிட்ட 17 புதிய அறிவிப்புகள்

அமைச்சர் செஞ்சி மஸ்தான்: கோப்புப்படம்

சென்னை

சிறுபான்மையினர் நல கல்லூரி விடுதிகளில் 14 லட்சம் ரூபாய் செலவில் நூலகம் ஏற்படுத்தப்படும் என, அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று (செப். 08) பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை (சிறுபான்மையினர் நலன்) மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, அத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் 17 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம்:

1. 14 சிறுபான்மையினர் நல கல்லூரி விடுதிகளில் 14 லட்சம் ரூபாய் செலவில் நூலகம் ஏற்படுத்தப்படும்.

2. 14 சிறுபான்மையினர் நல கல்லூரி விடுதிகளுக்கு 5 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் செலவில் உடற்பயிற்சி கருவிகள் மற்றும் விளையாட்டு கருவிகள் வழங்கப்படும்.

3. 14 சிறுபான்மையினர் நல கல்லூரி விடுதி மாணவ, மாணவியருக்கு தமிழ்நாடு திறன் வளர்ப்பு மேம்பாட்டுக் கழகம் மூலம் தனித்திறன் மற்றும் ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி அளிக்கப்படும்.

4. சிறுபான்மையினர் நல விடுதிகளில் மாணவ, மாணவிகளின் சேர்க்கைக்கு வருமான வரம்பு 1 லட்சம் ரூபாயிலிருந்து 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.

5. சிறுபான்மையினர் நல விடுதி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் பல்வகை செலவினத் தொகை இரு மடங்காக 9 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலவில் உயர்த்தி வழங்கப்படும்.

6. உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர் அல்லது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் திருமண உதவித்தொகை ஆண்களுக்கு 2,000 ரூபாயிலிருந்து 3,000 ரூபாயாகவும், பெண்களுக்கு 2,000 ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாகவும் உயர்த்தப்படும்.

7. சிறுபான்மையினருக்கு 1,000 இலவச மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரங்கள் 45 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.

8. தேனி மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையினர் விடுதிக்கு சொந்த கட்டிடம் 3 கொடியே 47 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்படும்.

9. ஜெருசலேம் புனித பயணத்துக்கு அருட்சகோதரிகள்/ கன்னியாஸ்திரிகளுக்கு வழங்கப்படும் மானியம் 37,000 ரூபாயிலிருந்து 60,000 ரூபாயாக 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் உயர்த்தப்படும்.

10. சிறுபான்மையினர் விடுதி மாணவ, மாணவிகளுக்கு சிறுபான்மையினர் பண்டிகைகளுக்கு (புத்த பூர்ணிமா, மஹாவீர் ஜெயந்தி, பக்ரித், ரம்ஜான், கிறிஸ்துமஸ்) சிறப்பு உணவு வழங்கப்படும்.

11. உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக உள்ள 10,583 நபர்களுக்கு மிதிவண்டிகள் 4 கோடியே 76 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.

12. அனைத்து மாவட்டங்களில் கூடுதலாக முஸ்லிம், கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கங்கள் தொடங்கப்படும்.

13. வக்ஃப் நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கப்படும் சகாயத் தொகை விகிதத்துக்கு ஏற்ப வக்ஃப் வாரியத்துக்கு வழங்கப்படும் ஆண்டு நிர்வாக மானியம் உயர்த்தப்படும்.

14. வக்ஃப் வாரிய தலைமை அலுவலகத்துக்கு வக்ஃப் வாரியத்தில் புதிதாக கட்டிடம் கட்டப்படும்.

15. 8 வக்ஃப் சரக அலுவலகங்களுக்கு சொந்த கட்டிடம் கட்ட 1 கோடியே 28 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.

16. சிறுபான்மையினர் அதிகமாக வசிக்கும் 5 மாவட்டங்களில், புதிய பணியிடங்களுடன் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் 1 கோடியே 75 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் செலவில் தோற்றுவிக்கப்படும்.

17. கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும்.

ஆகிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x