Last Updated : 08 Sep, 2021 04:02 PM

 

Published : 08 Sep 2021 04:02 PM
Last Updated : 08 Sep 2021 04:02 PM

காவலர் தேர்வில் நிராகரிக்கப்பட்டோருக்கு மீண்டும் உயர அளவீடு சோதனை: உயர் நீதிமன்றம் உத்தரவு

பிரதிநிதித்துவப் படம்

மதுரை

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வில் மார்பளவு, உயரம் அளவு குறைவாக இருப்பதாக நிராகரிக்கப்பட்டவர்களுக்கு திருச்சியில் செப். 22-ல் மீண்டும் உயரம் அளவீடு சோதனை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் ஒச்சதேவன்கோட்டையைச் சேர்ந்த பி.முனீஸ்வரன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

’’தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறை வார்டன், தீயணைப்புக் காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தேன். எழுத்துத் தேர்வில் வெற்றிபெற்று ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி மைதானத்தில் 27.7.2021-ல் நடைபெற்ற உடல் தகுதித் தேர்வில் பங்கேற்றேன். என் உயரத்தை அளவீடு செய்த அதிகாரிகள் நான் 169.5 செ.மீ. உயரம் மட்டும் இருப்பதாகக் கூறி என்னை நிராகரித்தனர்.

நான் 170 செ.மீ. உயரம் உள்ளேன். அதிகாரிகள் என் உயரத்தைச் சரியாக அளவீடு செய்யவில்லை. 2019-ல் நடைபெற்ற காவலர் தேர்வில் உயர அளவில் தேர்வானேன். உயரம் தாண்டுதலில் தேர்வாகாததால் பணி கிடைக்கவில்லை. இப்போது போதுமான உயரம் இல்லை என என்னை நிராகரித்துள்ளனர். எனவே, எனக்கு மீண்டும் உயர அளவீடு சோதனை நடத்த உத்தரவிட வேண்டும்’’.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இவரைப் போல் சீருடைப் பணியாளர் தேர்வில் உயரம் குறைவாக இருப்பதாக நிராகரிக்கப்பட்ட மதுரை, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 80-க்கும் மேற்பட்டோர் மீண்டும் மார்பளவு, உயர அளவீட்டு சோதனை நடத்த உத்தரவிடக்கோரி மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி கே.கிருஷ்ணகுமார் முன்பு விசாரணைக்கு வந்தன. மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் தாளை முத்தரசு, வெங்கடேசன், மகேஸ்வரன் உட்படப் பலர் வாதிட்டனர். பின்னர், மனுதாரர்களுக்குத் திருச்சியில் செப்.22-ல் மீண்டும் மார்பு அளவு மற்றும் உயர அளவீடு செய்யவும், இந்த உத்தரவு மனுதாரர்களுக்கு மட்டும் பொருந்தும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x