

தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தத்தை நேற்று தொடங்கினர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். நேரடி பேச்சுவார்த்தை மூலம் ஊதிய மாற்றம் வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணி யாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், வருவாய்த் துறை கிராம உதவியாளர்கள் ஆகியோருக்கு கால முறை ஊதியம் மற்றும் சட்டப்பூர்வமான பென்ஷன் வழங்க வேண்டும். பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களை உயர் நீதிமன்ற உத்தரவின்படி பணி நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
கடந்த 5 ஆண்டுகளாக தங்களின் கோரிக்கைகள் ஏதும் நிறைவேற்றப்படாததால், காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மற்றும் 68 தோழமை சங்கங்களை உள்ளடக்கிய அனைத்து சங்க போராட்டக் குழு சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை நேற்று முதல் தொடங்கினர். தமிழகம் முழுவதும் அரசு ஊழியர் சங்கத்தின் அனைத்து வட்டக்கிளைகள் சார்பாகவும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அரசு ஊழியர் சங்க குறளகம் பகுதிக்குழு சார்பில் சென்னை மாநகராட்சி அலுவலகம் முன்பாக நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வடசென்னை மாவட்டத் தலைவர் கலைச்செல்வி தலைமையேற்றார். இதில் பங்கேற்ற அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் ஆர்.தமிழ்ச்செல்வி பேசியதாவது:
அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் நடைபெறும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால், வருவாய்த் துறை, வணிக வரித்துறை, வளர்ச்சித் துறை உள்ளிட்ட துறை அலுவலகங்கள் முற்றிலுமாக இழுத்துப் பூட்டப்பட்டுள்ளன. அரசு அலுவலகங்களும் வெறிச்சோடி காணப்படுகின்றன.
நேற்று முன்தினம் (9-ம் தேதி) சில சங்கங்களின் தலைவர்களை அழைத்து, தலைமைச் செயலகத்தில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், உள்துறைச் செய லாளர் அபூர்வ வர்மா ஆகியோர் அடங்கிய குழு வினர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். எங்களது கோரிக்கைகள் நியாயமானவை என்று ஏற்றுக்கொண் டவர்கள், முதல்வரிடம் அவற்றை தெரிவிப்பதாகவும் கூறினர். அதை கடிதமாக எழுதித் தருமாறு கேட்டோம். அவர்கள் தர மறுத்துவிட்டனர்.
இதனால் நாங்கள் திட்டமிட்டபடி காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளோம். ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். தமிழக அரசு எங்களது நியாயமான கோரிக்கைகளை ஏற்காவிட்டால், வரும் 12-ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்துவது என்றும் திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.