Published : 08 Sep 2021 01:03 PM
Last Updated : 08 Sep 2021 01:03 PM

எம்‌ஜிஆரின்‌ பேரன்பைப்‌ பெற்றவர்: புலவர்‌ புலமைப்பித்தனுக்கு அதிமுக இரங்கல்

சென்னை

எம்‌ஜிஆரின்‌ பேரன்பைப்‌ பெற்றவர் புலவர்‌ புலமைப்பித்தன் என்று அவரது மறைவுக்கு அதிமுக இரங்கல் தெரிவித்துள்ளது.

பிரபல கவிஞரும், தமிழக அரசின் முன்னாள் சட்ட மேலவைத் துணைத் தலைவராகவும் இருந்த புலமைப்பித்தன் உடல்நலக் குறைவு காரணமாகக் காலமானார். அவருக்கு வயது 86. சமீபத்தில் வயது முதிர்வின் காரணமாக உடல்நலம் குன்றியிருந்த புலவர்‌ புலமைப்பித்தன் சென்னை அடையாறு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சைப் பலனின்றி இன்று (செப்.08) காலை அவர் உயிர் பிரிந்தது.

இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர்‌ ஓ.பன்னீர்‌ செல்வம்‌, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள‌ இரங்கல்‌ செய்தி:

’’அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழக முன்னாள்‌ அவைத்‌ தலைவர்‌ புலவர்‌ புலமைப்பித்தன்‌ உடல்நலக்‌ குறைவால்‌ மரணமடைந்துவிட்டார்‌ என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றோம்‌.

தமிழ்‌நாடு சட்ட மேலவையின்‌ துணைத்‌ தலைவராகப்‌ பணியாற்றிய புலவர்‌ புலமைப்பித்தன்‌‌, அதிமுக நிறுவனத்‌ தலைவர்‌, எம்‌ஜிஆரின்‌ பேரன்பைப்‌ பெற்றவர்‌. எம்‌ஜிஆரால்‌ தமிழ்‌நாடு அரசவைக்‌ கவிஞராக நியமிக்கப்பட்டு தமிழ்த்‌ தொண்டு ஆற்றியவர்‌.

கோவை மாவட்டத்தில்‌, ஒரு பள்ளியில்‌ தமிழாசிரியராக தனது வாழ்வைத்‌ தொடங்கிய புலவர்‌ புலமைப்பித்தன்‌, தமிழ்த்‌ திரை உலகில்‌ 1968 முதல்‌ 'குடியிருந்த கோயில்','அடிமைப்பெண்‌', 'நல்ல நேரம்‌', 'இதயக்கனி', 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்', 'எங்கம்மா மகாராணி', 'உலகம்‌ சுற்றும்‌ வாலிபன்' போன்ற எண்ணற்ற திரைப்படங்களுக்கு காலத்தால்‌ அழியாத பாடல்களை எழுதிப் புகழ்பெற்றவர்‌.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அதிமுக இலக்கிய அணிச்‌ செயலாளராகவும்‌, பின்னர்‌ அதிமுக அவைத்‌ தலைவராகவும்‌ நியமிக்கப்பட்டுப் பணியாற்றிய புலவர்‌ புலமைப்பித்தன்‌ இயற்றிய “வாசலிலே இரட்டை இலை கோலமிடுங்கள்‌” போன்ற மனதைத்‌ தொடும்‌ எண்ணற்ற அதிமுக கொள்கை விளக்கப்‌ பாடல்கள்‌ நாடாளுமன்ற, சட்டப்பேரவைப்‌ பொதுத்‌ தேர்தல்‌ பிரச்சாரங்களின்‌போது தமிழ்நாடெங்கும்‌ ஒலித்தன.

இத்தகைய சிறப்புக்குரிய‌ புலவர்‌ புலமைப்பித்தனை இழந்து வாடும்‌ அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும்‌, அனுதாபத்தையும்‌ தெரிவித்துக்‌ கொள்கிறோம்‌. அன்னாரது ஆன்மா இறைவன்‌ திருவடி நிழலில்‌ இளைப்பாற எல்லாம்‌ வல்ல இறைவனைப்‌ பிரார்த்திக்கிறோம்‌’’.

இவ்வாறு அதிமுக தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x