

கவிஞர் புலமைப்பித்தன் மறைவுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரபல கவிஞரும், தமிழக அரசின் முன்னாள் சட்ட மேலவைத் துணைத் தலைவராக இருந்த புலமைப்பித்தன் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலை காலமானார். அவருக்கு வயது 86.
இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்ட இரங்கல் செய்தியில் ”அ.தி.மு.க வின் முன்னாள் அவைத் தலைவர் கவிஞர் புலமைப்பித்தன் அவர்களின் மறைவு மிகவும் வருத்தம் அளிக்கிறது.
முன்னாள் முதல்வர் மறைந்த எம்.ஜி.ஆருடனும், முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவுடனும் நெருங்கிப் பழகியவர். இயக்க வளர்ச்சிக்காகப் பாடுபட்டவர்.
தமிழ் கவிஞர் மற்றும் பாடலாசிரியர். தமிழ்த்திரையுலகில் சிறந்த பாடலாசிரியருக்கான விருதுகள் பெற்றவர். தமிழ் ஆசிரியராக சிறப்பாக பணியாற்றியவர்.
அன்னாரது மறைவு அ.தி.மு.க வுக்கும், குடும்பத்தாருக்கும் பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், அ.தி.மு.க இயக்கத்தினருக்கும் த.மா.கா சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.