

பேக் டெய்லரிடம் ரூ.10 லட்சம் பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் காவல் ஆய்வாளரின் செயல்பாடு காவல்துறையை களங்கப்படுத்தி விட்டதாக உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடியைச் சேர்ந்த பேக் டெய்லரிடம் ரூ.10 லட்சம் பணம் பறித்த வழக்கில் மதுரை நாகமலை புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் வசந்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
முன்ஜாமீன் மனு
இந்த வழக்கில் கைது செய்யப்படுவதற்கு முன்பு, முன்ஜாமீன் வழங்கக் கோரி உயர் நீதிமன்றக் கிளையில் வசந்தி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் மனுவை திரும்பப் பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், நீதிபதி பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மனுதாரர் அரசு ஊழியர். அவரது செயல்பாடு அவர் பணிபுரியும் காவல்துறையை களங்கப்படுத்தும் வகையில் உள்ளது. இதனால் சாதாரண மக்கள் காவல்துறை மீதான நம்பிக்கையை இழக்கும் நிலை உருவாகி உள்ளது.
யார் தவறு செய்தாலும் தண்டனை கிடைக்கும், கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் எனக் கூறி மனுவை திரும்பப் பெற அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.