

விநாயகர் சதுர்த்திக்கு பயன்படுத்தும் விநாயகர் சிலைகளை, சுற்றுச்சூழலுக்கு உகந்த இயற்கை மூலப் பொருட்களைக் கொண்டு தயாரிக்க வேண்டும் என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, சத்குரு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், “இந்தியாவில் இருக்கும் கடவுள்களில் மிகவும் அழகானவர் விநாயகர். அன்பான தன்மையாலும், குணத்தாலும் அவர் உலகம் முழுவதும் வணங்கப்படுகிறார். இந்தியாவிலும், உலகின் பல பகுதிகளிலும் விநாயகர் சதுர்த்தி ஒரு முக்கிய பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அந்தப் பண்டிகையின் போது, நாம் வணங்கும் விநாயகர் சிலைகளை மண், சிறுதானியம், மஞ்சள் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த இயற்கை மூலப் பொருட்களைக் கொண்டு தயாரிக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு தயாரித்தால் அதை நீரில் கரைக்க முடியாது. பானைகள் செய்வதைப் போல சுடு மண்ணில் தயாரித்தாலும் அதைக் கரைக்க முடியாது.
மேலும், சிலையின் மீது செயற்கை வர்ணங்களை பூசினால் அது நீரை மாசுபடுத்தும். ஆகவே, நீரில் கரையும் தன்மை கொண்ட இயற்கை மூலப் பொருட்களைக் கொண்டு மட்டுமே விநாயகர் சிலையை தயாரித்து இவ்விழாவைக் கொண்டாட வேண்டும். ஒரு கடவுளை உருவாக்கி, அதை நீரில் கரைக்கும் சுதந்திரத்தை விநாயகர் சதுர்த்தி பண்டிகை நமக்கு வழங்குகிறது. அதை சரியாக பயன்படுத்த வேண்டும். நம் கலாச்சாரத்தை பாதுகாப்பதற்கும் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவதற்கும் இதுவே சிறந்த வழி” எனத் தெரிவித்துள்ளார்.
வீடியோவுடன் சேர்த்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நம் பிரியமான கணேசர் சூழலியலோடு மிகுந்த நட்புறவான கடவுளாவார். எந்த மண்ணில் இருந்து உருவெடுத்தாரோ அதனுள்ளேயே மீண்டும் கரைந்திட விரும்புகிறார். அவர் கரைந்துபோக இயற்கையான பொருட்களால் அவர் உருவம் உருவாக்கப்பட வேண்டும். அவரை பொறுப்புடனும், அக்கறையுடனும் கொண்டாட உறுதியேற்போம். ஆசிகள்” என குறிப்பிட்டுள்ளார்.