

சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் 36-வது தேசிய கண்தான இருவார விழா கடந்த மாதம் 25-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
நேற்று நடைபெற்ற விழாவில் கண் தானம் செய்தவர்களின் குடும்பத்தினருக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி வடசென்னை தொகுதி எம்.பி. கலாநிதி வீராசாமி கவுரவித்தார். தொடர்ந்து மருத்துவ மற்றும் செவிலியர் மாணவ, மாணவிகளுக்கு கவிதை, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.
மருத்துவமனை இயக்குநர் எம்.வி.எஸ்.பிரகாஷ், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, சென்னை அரசு பொது மருத்துவமனை டீன் தேரணிராஜன், சென்னை அரிமா கண் வங்கி அறக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் என்.ஆர்.தவே, தமிழ்நாடு கண் பார்வை இழப்பு தடுப்பு சங்கத்தின் திட்ட இயக்குநர் எஸ்.வி.சந்திரகுமார் ஆகியோர் விழாவில் பங்கேற்றனர்.
இது தொடர்பாக மருத்துவமனை இயக்குநர் எம்.வி.எஸ்.பிரகாஷ் கூறியதாவது:
சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் 36-வது தேசிய கண்தான இருவார விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் சுமார் 60 லட்சம் பேர் பார்வையில்லாமல் இருக்கின்றனர். இதில் 10 லட்சம் பேருக்கு கருவிழி பாதிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் புதிதாக 30 ஆயிரம் பேருக்கு கருவிழி பாதிக்கப்படுகிறது. ஆனால் குறைவான அளவே கண் தானம் கிடைக்கிறது. கருவிழி பாதிப்பால் பார்வை இழந்தவர்களுக்கு மட்டும்தான் தானமாக பெறப்படும் கண்கள் பொருத்தி மீண்டும் பார்வையை கொண்டு வரமுடியும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.