சென்னையில் மாணவிக்கு கரோனா தொற்று: தனியார் பள்ளியை ஒரு வாரம் மூட முடிவு

சென்னையில் மாணவிக்கு கரோனா தொற்று: தனியார் பள்ளியை ஒரு வாரம் மூட முடிவு
Updated on
1 min read

தமிழகத்தில் கரோனா தொற்று குறைந்துள்ள நிலையில், கடந்த 1-ம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

அதேசமயம், தமிழகம் முழுவதும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கரோனா தொற்று உறுதியாகி வருகிறது. இதுவரை 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஆழ்வார்பேட்டையில் செயல்படும் தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு பயிலும் மாணவிக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மாணவியின் பெற்றோருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

அந்த மாணவியின் தந்தை அண்மையில் பெங்களூரு சென்று வந்துள்ளார். அவர் மூலமாக மகள் மற்றும் தாய்க்கு தொற்று பரவியிருக்கலாம் என்று தெரிகிறது.

தொற்று ஏற்பட்ட மாணவியுடன் தொடர்பில் இருந்த மாணவர்கள், ஆசிரியர்கள் என 103 பேருக்கு மாநகராட்சி சார்பில் கரனோ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் யாருக்கும் தொற்று உறுதியாகவில்லை.

இதற்கிடையில், மாநகராட்சி துணை ஆணையர் மனிஷ் நேற்று பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு வாரத்துக்கு பள்ளி மூடப்பட்டுள்ளது. மூன்று பேருக்கு தொற்று உறுதியானால், பள்ளியை மூடலாம். எனினும், இந்தப் பள்ளியை ஒரு வாரம் மூடுவதற்கு பள்ளி முதல்வர் முடிவெடுத்துள்ளார்.

பள்ளியில் நோய் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தொடர்ந்து 14 நாட்கள் மாணவர்கள், ஆசிரியர்களைக் கண்காணித்து, யாருக்காவது காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால், உடனே பரிசோதனை செய்யப்படும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in