

“ஏழை எளியோரின் முன்னேற்றத்திற்கு பெரும் பங்காற்றி மறைந்த முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமிக்கு விழுப்புரம் மாவட்டத்தில் திரு உருவச் சிலையுடன் அரங்கம் அமைக்கப்படும்” என்று சட்ட மன்றத்தில் நேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
விவசாயத்துறை அமைச்சராக பதவி வகித்த ஏ. கோவிந்தசாமி செய்த சாதனைகள் குறித்து அன்னியூர் கிராமத்தைச் சேர்ந்த அரிபுத்திரன் ( 75) என்பவரிடம் கேட்டபோது அவர் கூறியது:
இன்று திமுக தங்கள் தேர்தல் சின்னமாக வைத்திருக்கும் உதயசூரியன் சின்னத்தை அண்ணாதுரைக்கு கொடுத்து உதவியர் ஏ.கோவிந்தசாமி.
1954-ம் ஆண்டு மாவட்ட ஆட்சி மன்றத் தேர்தல் (DISTRICT BOARD) எனப்படும் தேர்தலில் ஏ.கோவிந்தசாமி காணை காஞ்ச னூர் தொகுதியில் உதயசூரியனை தேர்தல் சின்னமாக வைத்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 1957-ம் ஆண்டு திமுக முதன் முதலில் பொதுத் தேர்தலை சந்தித்தது. அப்போது கட்சிகென்று எந்த தேர்தல் சின்னமும் இல்லாததால் ஏ.கோவிந்தசாமி போட்டியிட்டு வென்ற உதயசூரியன் சின் னத்தை திமுகவிற்கு கொடுத்து உதவினார். கருணாநிதியால் ‘கொள்கை குன்றம்’ என்று பாராட்டப்பட்டவர்.
1952-ம் ஆண்டு முதல் ஏழை எளிய மக்களுக்காகவும், நந்தன் கால்வாய் திட்டத்திற்காகவும் சட்டமன்றத்தில் குரல் கொடுத்தவர். மொழிவாரி மாநிலம் பிரிந்த போது, ‘திருத்தணி தமிழகத்தோடு இருக்கவேண்டும்’ என போராடிய ம.பொ.சிவஞா னம், திருத்தணி விநாயகம் இவர்களுடன் சேர்ந்து ஏ.கோவிந்தசாமியும் சட்டமன்றத்தில் குரல்கொடுத்தவர்.
தென்னாற்காடு மாவட்டத்தில் இருந்து படிக்க சென்னை வந்த மாணவர்களை தனது வீட்டில் தங்க வைத்து படிக்க வைத்தார். ராமசாமி படையாச்சியின் உழவர் உழைப்பாளர் கட்சியின் பொது செயலாளராக பதவி வகித்தவர். பாட்டாளி மக்கள் கட்சி யின் நிறுவனர் டாக்டர் ராமதாஸூக்கு 1969-ம்ஆண்டு அரசு பணி பெற்று தந்து, அரசு உத்தரவை தானே நேரில் சென்று திண்டிவனத்தில் வழங்கியவர்.
கருணாநிதி முதல்வராக இருந்த போது திண்டிவனத்தில் அரசுக் கல்லூரிக்கு கோவிந்தசாமியின் பெயரை சூட்டினார். கடலூரில் உள்ள தென்னாற்காடு மாவட்ட ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் அவரது மார்பளவுசிலையை அதன் தலைவராக இருந்த வண்டிபாளையம் சுப்பிரமணியன் நிறுவி, கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நந்தன்கால்வாய் அமைக்க முழு முதற் காரணமாக இருந்த ஏ.கோவிந்தசாமியின் சிலையை பனமலை ஏரியோரம் விவசாயிகள் தாங்களாகவே ஒருங்கிணைந்து, அரசியலுக்கு அப்பாற்பட்டு நிறுவி, திறந்து வைத்தனர். இப்போதும் அச்சிலையை காணலாம் என்று தெரிவித்தார்.