

ஊழல் செய்த முன்னாள் அமைச்சர்கள் மீது முதல்வர் சரியான நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என மாணிக்கம்தாகூர் எம்.பி. கூறினார்.
விருதுநகரில் செய்தியாளரிடம் அவர் கூறியதாவது:
பெரியாரின் பிறந்தநாளை சமூக நீதி நாளாக தமிழக அரசு அறிவித்திருப்பதை வரவேற்கி றோம். இதேபோன்று அறிவிக்க காங்கிரஸ் முதல்வர்கள் ஆளும் மாநிலங்களுக்குக் கோரிக்கை வைத்துக் கடிதம் எழுதுவோம். பாரதியாரை திமுக, காங்கிரஸ் போற்றி வருகிறது. நீதிமன்றத்தின் கருத்தை மத்திய அரசு மதிப்பதில்லை என தலைமை நீதிபதி வருத்தம் தெரிவித்துள்ளார். கடந்த 7 ஆண்டுகளில் ரூ.23 லட்சம் கோடி பெட்ரோல், டீசல் வரியாகப் பெற்று தொழிலதிபர்களுக்கு கொடுக்கும் மத்திய அரசு, விவ சாயிகள் பிரச்சினையிலும் கவனம் செலுத்த வேண்டும்.
தமிழகத்தில் 10-ம் வகுப்பு 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான மன அழுத்தத்தைக் குறைக்கவே பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. கடந்த அதிமுக ஆட்சியில் ஊழல் செய்த அமைச்சர்கள் மீது முதல்வர் ஸ்டாலின் சரியான நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது, என்றார்.
முன்னதாக விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நாடார் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் மக்களவை உறுப்பினர் தொகுதி நிதியில் ரூ.5.50 லட்சம் செலவில் அமைத்த குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை மாணிக்கம் தாகூர் எம்.பி. தொடங்கிவைத்தார்.