Published : 08 Sep 2021 03:18 AM
Last Updated : 08 Sep 2021 03:18 AM

மயிலாடுதுறையில் மாயூரம் வேதநாயகம் பிள்ளைக்கு மணிமண்டபம்: தமிழக அரசுக்கு தமிழ் ஆர்வலர்கள் வலியுறுத்தல்

மயிலாடுதுறை காந்திஜி சாலையில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் புதர்களுக்கு நடுவே உள்ள மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் சிலை.

திருச்சி

மயிலாடுதுறையில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் சிலை கண்டுகொள்ளப்படாத நிலையில் இருப்பதால் தமிழ் ஆர்வலர்கள் வேதனையடைந்துள்ளார். எனவே, அவருக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி அருகிலுள்ள குளத் தூரில் 1826-ல் பிறந்தவர் வேத நாயகம். இவரது தந்தை சவரி முத்து பிள்ளை, தாய் ஆரோக்கிய மரியம். திண்ணைப் பள்ளியில் பயின்ற இவர் 11-வது வயதிலேயே தமிழில் புலமை பெற்றார். ஆங்கி லத்தையும் கற்றுத் தேர்ந்தார்.

திருச்சி நீதிமன்றத்தில் ஆவணக் காப்பாளராக பணியைத் தொடங்கி, 1850-ல் திருச்சி மாவட்ட நீதிமன்ற மொழிபெயர்ப்பாளரானார். 1857-ல் தரங்கம்பாடி முன்சீப்பாக பணி யேற்றதன் மூலம் நாட்டின் முதல் இந்திய நீதிபதி என்ற பெருமையை பெற்றார். இதைத் தொடர்ந்து மயிலாடுதுறையில் மாவட்ட முன்சீப்பாக 13 ஆண்டுகள் பணி யாற்றியுள்ளார்.

மயிலாடுதுறையில் (அப்போது மாயூரம்) வாழ்ந்த காலத்தில் பெரும் புகழ் பெற்றதால் தனது பெயருக்கு முன்னாள் மாயூரம் என சேர்த்துக் கொண்டார்.

தான் அவ்வப்போது எழுதிய நீதிக்கருத்துகளை 1858-ம் ஆண் டில் தொகுத்து நீதி நூலாக வெளியிட்டார். ஆங்கிலத்தில் இருந்த நீதிமன்றத் தீர்ப்புகளை தமிழில் மொழிபெயர்த்து சித்தாந்த சங்கிரகம் என்ற நூலை எழுதினார். இதுவே தமிழில் முதலில் வெளிவந்த சட்ட நூலாகும். இதுமட்டுமல்லாது பிரதாப முதலியார் சரித்திரம் என்ற நூலை1879-ல் அச்சு வடிவில் வெளியிட்டார். இதுவே தமிழின் முதல் புதினம் என்ற சிறப்பைப் பெற்றது.

பெண்களின் முன்னேற்றத்துக் கென முதன்முதலில் தனி நூலை (பெண் கல்வி) எழுதியவர். மொழிபெயர்ப்பு நூல்கள், இசை நூல்கள், சமய நூல்கள் என 12 நூல்களை இவர் எழுதியுள்ளார்.

1872-ல் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர், தேர்தலில் போட்டியிட்டு மயிலாடுதுறை நகராட்சித் தலைவராக பொறுப் பேற்றார். அப்போது தமிழகத் தின் முதல் பெண்கள் பள்ளியை தொடங்கினார்.

பல்வேறு பெருமைகளை கொண்ட மாயூரம் வேதநாயகம் பிள்ளை 1889-ம் ஆண்டு உயிரிழந் தார். மயிலாடுதுறை காந்திஜி சாலையில் உள்ள கிறிஸ்தவ கல்லறைத் தோட்டத்தில் இவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதற்கு எதிரிலுள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த இவரது சிலை, சில ஆண்டுகளுக்கு முன்னர் அங்கிருந்து மாற்றப்பட்டு, இந்த கல்லறைத் தோட்ட வளாகத் திலேயே ஒரு பீடம் அமைத்து நிறுவப்பட்டது. தற்போது அங்கு புதர்மண்டிக் காணப்படுகிறது.

முதல் இந்திய நீதிபதியாக பணியாற்றிய மாயூரம் வேதநாயகம் பிள்ளையை ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது பெரும் வேதனையளிப்பதாகத் தெரிவிக்கின்றனர் தமிழ் ஆர்வலர் கள்.

இதுகுறித்து மயிலாடுதுறை வழக்கறிஞர் சங்கத் தலைவர் வேலு.குபேந்திரன் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: தமிழக சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற செய்தித்துறை மானியக் கோரிக்கையின் போது பேசிய அமைச்சர் மு.பெ.சாமி நாதன், நாட்டுக்கு உழைத்த நல்லவர்கள் பலருக்கு அவரவர் சொந்த ஊர்களில் சிலை அமைக் கப்படும் அறிவித்துள்ளார்.

அதேபோன்று, தமிழுக்கும், நீதித்துறைக்கும் பல்வேறு பெருமைகளை தேடித் தந்த மாயூரம் வேதநாயகம் பிள்ளையை கவுரவப்படுத்தும் வகையில் தமிழக அரசு மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் அவரது சிலையை நிறுவவும், மயிலாடுது றையில் மணிமண்டபம் அமைத்து அவரது பெருமைகளை இளைய தலைமுறையினர் அறிந்து கொள் ளவும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x