

இந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் 1.5 லட்சம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும் என திருவண்ணாமலையில் நடைபெற்ற தடை உத்தரவு விளக்க கூட்டத்தில் இந்து முன்னணியினர் தெரிவித்தனர்.
விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தமிழக அரசு விதித்துள்ள தடை உத்தரவு விளக்கக் கூட்டம் திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று நடை பெற்றது. வட்டாட்சியர் எஸ்.சுரேஷ் தலைமை வகித்தார்.
தமிழகத்தில் கரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு மத சார்பான ஊர்வலங்கள், திரு விழாக்களை நடத்த தடை உள்ளது. விநயாகர் சதுர்த்தி விழாவுக்காக பொது இடங்களில் சிலைகளை நிறுவ அனுமதி மறுக்கப்படுகிறது. சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்று நீர் நிலைகளில் கரைக்கவும் அனுமதியில்லை. விநாயகர் சதுர்த்தி விழாவை, வீடுகளிலேயே கொண்டாடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. வீடுகளில் விநாயகர் சிலையை வைத்து தனி நபர் வழிபடவும், பின்னர் அந்த சிலையை தனி நபராக கொண்டு சென்று நீர்நிலை களில் கரைக்க தடையில்லை.
வீடுகளில் வைத்து வழிபடும் விநாயகர் சிலைகளை, கோயில் களில் வைக்க அனுமதி அளிக் கப்படுகிறது. அச்சிலைகளை முறையாக அகற்ற, இந்து சமய அறநிலையத் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவுகளின் விவரம் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், “நீர்நிலைகளில் தண்ணீர் அதிகம் உள்ளதால், விநாயகர் சிலைகளை கரைக்கும் போது கவனமாக இருக்க வேண்டும், நீர் நிலைகள் மற்றும் அதன் அருகே சிறுவர்களை அனுமதிக்க வேண்டாம்” என தீயணைப்புத் துறையினர் கேட்டுக் கொண்டனர்.
இதையடுத்து இந்து முன்னணி மற்றும் பாஜகவினர் பேசும்போது, “கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 5 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டதால், கூட்டம் இருந்தது. இப்போது, ஒவ்வொரு வீதியிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்படுகிறது. கூட்டம் இருக்காது என்பதால், தடை விதிக்கக்கூடாது. இந்து மத பண்டிகையில் மட்டும் தமிழக அரசு தலை யிடுகிறது. பிற மதங்களில் தலையிடுவது இல்லை.
ஆட்சியர் தலைமையில் நடத்தப்பட்ட கூட்டத்தில், கரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி விநாயகர் சிலைகளை வைக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். அதே கோரிக்கையை உங்களிடம் தெரிவிக்கின்றோம்.
விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது இந்துக்கள் மனதை வேதனைப் படுகிறது. விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி கேட்டு இந்து முன்னணி தலைவர், சென்னையில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இந்துக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண் டும். இரண்டு கட்ட தடுப்பூசியை செலுத்திக் கொண்ட 5 பேருக்கு அனுமதி வழங்கி, விநாயகர் சிலைகளை வைக்க அனுமதிக்க வேண்டும். நாங்கள் மக்களை திரட்டி ஊர்வலம் நடத்த மாட்டோம். தமிழகம் முழுவதும் ஒன்றரை லட்சம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய உள்ளோம்.
தமிழக அரசுக்கு கண்டனம்
கரோனா தொற்று குறைவாக உள்ள தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தடை விதிப்பது ஏன்? இந்து மத வழிபாடுகளை பின்பற்றி வரும் மக்களின் உணர்வு களுக்கு எதிராக தமிழக அரசு செயல்படுகிறது. இந்து மத வழிபாடு உரிமையில் தலையிடும் தமிழக அரசை கண்டிக்கிறோம்” என்றனர்.
இதையடுத்து, வட்டாட்சியர் எஸ்.சுரேஷ் பேசும்போது, “உங்களது அனைத்து கோரிக்கைகளும் மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு சென்று பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க பரிந் துரைக்கப்படும்” என்றார். இதில், காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.