

திருப்பூரில் மாநகராட்சி 20-வது வார்டுக்கு உட்பட்ட போயம்பாளையம் பிரிவு சக்தி நகர் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில், வகுப்பறை கட்டுமானப் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால், மாணவ, மாணவிகள் வெயிலில் அமர்ந்து படிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த வி.எஸ்.சசிகுமார் கூறியதாவது: இப் பள்ளி மாணவ, மாணவிகள் வகுப்பறை வசதியின்றி, பல ஆண்டுகளாக வெளியில் அமர்ந்து படிக்கிறார்கள். போதிய இடவசதியின்றி இரண்டு வகுப்பு மாணவர்கள், ஒரே அறையில் அமர்ந்து படிக்கிறார்கள். மாநகராட்சி சார்பில் பள்ளியில் நடைபெற்று வந்த புதிய வகுப்பறை கட்டுமானப் பணிகள், நிதிப் பற்றாக்குறையால் பாதியிலேயே நிற்கிறது. இதனால், பள்ளிக் குழந்தைகள் சிரமப்படுகின்றனர்.
மேலும், பள்ளி முன்பு தேங்கியுள்ள கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகியுள்ளன. இப் பகுதியில் ஏற்கெனவே குழந்தைகள் காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகி வரும் நிலையில், 100 மாணவ, மாணவிகள் படிக்கும் பள்ளி முன்பு சுகாதாரமற்ற சூழல் நிலவுகிறது. சக்தி நகர், கணபதி நகர், ஆர்.கே.நகர் மற்றும் வடிவேல் நகரைச் சேர்ந்த ஏழைத் தொழி லாளர்கள் பெரும்பாலானோரின் குழந்தைகள் இங்கு தான் படிக்கிறார்கள். பள்ளியின் வளர்ச்சியை கருத்தில்கொண்டும், குழந்தைகளின் மீது அக்கறை செலுத்தும் வகையிலும் கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
இதுதொடர்பாக பள்ளித் தலைமையாசிரியர் மு.நிர்மலா ‘தி இந்து’விடம் கூறும்போது, “புதிய வகுப்பறை கட்டிடப் பணிகள் முடிவடைந்ததும், அதில் பள்ளிக் குழந்தைகள் அமர வைக்கப்படுவார்கள். போதிய ஆசிரியர்கள் மற்றும் குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன” என்றார்.
மாநகராட்சியின் 2-ம் மண்டல உதவி ஆணையர் வாசுக்குமார் கூறும்போது, “சக்தி நகர் மாநகராட்சி தொடக்கப் பள்ளிக்கு, ரூ.19.5 லட்சம் மதிப்பில் 2 புதிய வகுப்பறைகள் கட்ட ஒப்பந்தம் போடப்பட்டது. தற்போது கட்டிடம் கட்டி முடிக்க போதிய நிதி கிடைத்துள்ளது. ஒன்றரை மாதத்தில் பணிகள் முடிக்கப்பட்டு, வகுப்பறைகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்” என்றார்.