Published : 08 Sep 2021 03:18 AM
Last Updated : 08 Sep 2021 03:18 AM

திருவண்ணாமலை நகராட்சியில் ஒப்பந்ததாரர் கையில் கையொப்பமிட்ட ஆணையாளர்: நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு கோரிக்கை

கையில் ஆணையாளர் சந்திரா கையொப்பமிட்டதை காண்பித்த ஒப்பந்ததாரர் செல்வராஜ்.

திருவண்ணாமலை

முடிக்கப்பட்ட பணிகளுக்கு வழங்க வேண்டிய பணத்தை கேட்டு சென்ற ஒப்பந்த தாரர் கையில் திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளர் சந்திரா பச்சை நிற பேனாவில் கையொப்பமிட்டுள்ள சம்பவம் சமூக வலைதளத்தில் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை நகராட்சி பகுதியில் செய்து முடிக்கப்பட்ட ஒப்பந்த பணிக்கான தொகையை வழங்கக்கோரி சென்ற ஒப்பந்ததாரர் செல்வராஜியை, நகராட்சி ஆணையாளர் சந்திரா அவமதித்ததாகவும், அவரது கையில் பச்சை நிற பேனா மூலமாக கையொப்பமிட்டு, இதனை கொண்டு வங்கியில் பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என ஆணையாளர் கூறியதாக சமூக வலைதளத்தில் நேற்று தகவல் வெளியானது. ஆணையாளரின் செயலை நகராட்சி ஒப்பந்ததாரர்கள் வன்மையாக கண்டிப்பதாகவும், இது தொடர்பாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவு செய்யப்பட்டிருந்தது.

ஆணையாளரின் விளக்கம்

இதுகுறித்து நகராட்சி ஆணையர் சந்திராவை தொடர்பு கொண்டு கேட்டபோது, “திருவண்ணாமலை நகராட்சியில் ரூ.90 லட்சத்துக்கு பணிகள் செய்துள்ளதாகவும், அந்த பணத்தை உடனடியாக கொடுக்க வேண்டும் என ஒப்பந்ததாரர் கடந்த 2 மாதங்களாக எனக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார். நான், அவரிடம் பணிகள் முடிக்கப்பட்டதற்கான கோப்புகளை கொண்டு வாருங்கள், அதனை ஆய்வு செய்து பணத்தை கொடுக்கிறேன் என கூறினேன். இதுதொடர்பாக நகராட்சி பொறியாளரிடம் கோப்புகளை கேட்டுள்ளேன். எனது பார்வைக்கு கோப்புகள் வராத காரணத்தால், நான் கையொப்பமிடவில்லை.

நான், தி.மலை நகராட்சி ஆணையளாராக பணிக்கு வந்து 2 மாதங்கள் மட்டுமே ஆகிறது. நான் பணிக்கு வருவதற்கு முன்பாக, அந்த பணிகள் நடைபெற்றுள்ளது. முழு விவரத்தையும் ஆய்வு செய்யாமல், நான் எப்படி கையொப்பமிட வேண்டும். ஆனால், அந்த நபர், கடந்த 2 மாதகளாக தினசரி வந்து, பணத்தை கொடுக்க வேண்டும் என நெருக்கடி கொடுத்தார். கோப்புகள் இல்லாமல், என்னுடைய கையொப்பம் பயன்பெறாது என்பதை புரிய வைக்கவே கையொப்பமிட்டேன். மற்றபடி, அவரை அவமதிக்க வேண்டும் என்பதற்காக நான் செய்யவில்லை. நான், எந்த தவறும் செய்யவில்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x