Published : 07 Sep 2021 11:57 AM
Last Updated : 07 Sep 2021 11:57 AM

ஊதியம் தர பணமில்லை; பல்கலைக்கழகங்களின் நிதி நெருக்கடிக்குத் தீர்வு காண வேண்டும்: ராமதாஸ்

பல்கலைக்கழகங்களின் நிதி நெருக்கடிக்குத் தீர்வு காண வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (செப். 07) வெளியிட்ட அறிக்கை:

"தமிழகத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களும் மிகக் கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. பல்கலைக்கழகங்களுக்கு மத்திய, மாநில அரசுகளிடமிருந்து கிடைக்க வேண்டிய மானியத்தின் அளவு குறைந்துகொண்டே வரும் நிலையில், பல்கலைக்கழகங்களின் செலவுகள் அதிகரித்துவிட்டதுதான் இதற்குக் காரணமாகும். பல்கலைக்கழகங்களின் நிதிச்சுமையைப் போக்க வேண்டிய அரசுகள், அதற்கு மாறாகப் பல்கலைக்கழகங்களின் நிதிச்சுமையை அதிகரிப்பது நிலைமையைச் சிக்கலாக்கியுள்ளது.

பல்கலைக்கழகங்களின் வருவாய் ஆதாரங்கள் அனைத்தும் குறைந்துவிட்ட நிலையில், பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் வங்கிகளில் உள்ள வைப்பீடுகளை எடுத்துதான் சமாளித்து வருகின்றன. இந்த நிலையிலிருந்து பல்கலைக்கழகங்களைக் காப்பாற்ற வேண்டும்; இல்லாவிட்டால் பல்கலைக்கழகங்களில் ஊதியம் வழங்குவதற்குக் கூட நிதி இல்லாத நிலைமை ஏற்பட்டுவிடும் என்று கடந்த சில ஆண்டுகளாகவே நான் அறிவுறுத்தி வந்தேன். ஆனால், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாததன் காரணமாக பாரதிதாசன் பல்கலை. உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் 10 அரசுக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அவை இரு ஆண்டுகளுக்கு முன்புவரை பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளாகச் செயல்பட்டு வந்தன. அவை அரசுக் கல்லூரிகளாக மாற்றப்பட்ட பிறகும், அவற்றுக்கான ஊதியத்தை அரசு ஏற்றுக்கொள்ளாமல் பல்கலைக்கழகத்தின் தலையில் சுமத்தியதுதான் நிதி நெருக்கடிக்கான காரணங்களில் முக்கியமானது.

பாரதிதாசன் பல்கலைக்கழகக் கட்டுப்பாட்டில் உள்ள 10 கல்லூரிகளில் பணியாற்றும் 600 கவுரவ விரிவுரையாளர்கள் மற்றும் 90 ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கு மட்டும் ஆண்டுக்கு ரூ.15 கோடிக்கும் கூடுதலாகத் தேவைப்படுகிறது.

அந்தக் கல்லூரிகளில் இருந்து கிடைக்கும் வருமானத்தை அரசே எடுத்துக்கொள்ளும் நிலையில், ஊதியத்தை மட்டும் பல்கலைக்கழகங்கள் வழங்க வேண்டியிருப்பதுதான் பல்கலைக்கழகங்களின் சமாளிக்க முடியாத நிதி நெருக்கடிக்குக் காரணம் ஆகும்.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தைப் போலவே மற்ற பல்கலைக்கழகங்களிலும் கடுமையான நிதி நெருக்கடி நிலவுகிறது. அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் உறுப்புக் கல்லூரிகளாக இருந்து அரசுக் கல்லூரிகளாக மாற்றப்பட்டவற்றில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்குக் கடந்த 4 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.

அரசுத் தரப்பிலிருந்து நிதி வழங்கப்பட்டால் தவிர, அவர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. நேரடி அரசுக் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கும் கடந்த 4 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாத நிலையில், பல்கலைக்கழகங்களுக்கு அரசு எப்போது நிதி வழங்கும்? அங்கு பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு எப்போது ஊதியம் வழங்கப்படும்? என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது. இந்த வினாக்களுக்கான விடைகள் அரசிடம்தான் உள்ளன.

கவுரவ விரிவுரையாளர்கள் மட்டுமின்றி பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பிற பணியாளர்களுக்கு ஊதியம் தரவும் பல்கலைக்கழகங்கள் தடுமாறுகின்றன.

பல பல்கலைக்கழகங்களில் 10-ம் தேதி வாக்கில்தான் ஊதியம் வழங்கப்படுகிறது. ஒரு காலகட்டத்தில் ஒவ்வொரு பல்கலைக்கழகமும் பல நூறு கோடி ரூபாயை வங்கிகளில் வைப்பீடு செய்திருந்தன. ஆனால், இப்போது வைப்பீடு செய்த பணத்தை எடுத்துதான் ஊதியம் வழங்கிக் கொண்டிருக்கின்றன. இன்னும் சில ஆண்டுகளில் எந்தப் பல்கலைக்கழகத்திலும் ஊதியம் வழங்க நிதி இருக்காது என்பதுதான் உண்மை. அத்தகைய நிலை ஏற்படாமல் தடுக்க வேண்டும்.

பல்கலைக்கழகங்கள் சிறந்த ஆராய்ச்சி மையங்களாகத் திகழ வேண்டும்; புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்த வேண்டும்; அதன் மூலம் வருவாய் ஈட்டி பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைய வேண்டும். ஆனால், தமிழகப் பல்கலைக்கழகங்கள் அந்த அளவுக்கு மேம்படவில்லை.

இடைக்கால ஏற்பாடாகப் பல்கலைக்கழகங்களின் நிதி நெருக்கடியைத் தீர்க்கவும், நீண்டகால ஏற்பாடாக பல்கலைக்கழகங்களை ஆராய்ச்சியில் சிறந்தவையாகவும், பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றவையாகவும் மாற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்".

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x