Published : 07 Sep 2021 09:43 AM
Last Updated : 07 Sep 2021 09:43 AM

11 கல்குவாரிகள் அமையவுள்ள இடத்தில் பல்வேறு விவரங்கள் மறைப்பு; கருத்துக் கேட்புக் கூட்டத்தை ரத்து செய்யக் கோரி திருப்பூர் ஆட்சியரிடம் புகார்

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டத்தில் உள்ள மொரட்டுப்பாளையம் பகுதியில் 11 கல்குவாரிகள் அமைப்பதற்காக நடத்திய கருத்துக் கேட்புக் கூட்டத்தை ரத்து செய்யுமாறு பசுமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் புகார் அளித்தது.

பசுமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் முகிலன் உட்பட அப்பகுதி விவசாயிகள், மாவட்ட ஆட்சியர் சு.வினீத்திடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

''மொரட்டுப்பாளையம் ஊராட்சியில் புதிதாக அமைக்க இருக்கும் 11 கல்குவாரிகளுக்கு கருத்துக் கேட்புக் கூட்டம் கடந்த 23-ம் தேதி மதியம் 12 மணிக்கு, ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. மாசு கட்டுப்பாட்டு வாரிய விதிகளுக்குப் புறம்பாக நடத்தப்பட்டுள்ளதால், நடந்த கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும். குறிப்பாக இந்த 11 கல்குவாரிகளுக்கான 13 பக்க சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு சுருக்க அறிக்கை விதிகளின் படி இல்லை. திட்டத் தளத்தின் வரைபடம் இல்லை, திட்டம் அமைய இருக்கும் பகுதியைச் சுற்றிய 300 மீட்டர் தூரம், 500 மீட்டர் தூரம் கொண்ட செயற்கைக்கோள் வரைபடம் இல்லை.

வளங்கள் மற்றும் இருப்புகள், ஐந்து ஆண்டு உற்பத்தி காட்டும் பட்டியல் படம் எதுவும் இல்லை. திட்டத் தளத்தைச் சுற்றி கிராமம், நகரம், அருகில் உள்ள சாலை வழி, புகைவண்டி நிலையம், நீர்நிலைகள், 10 கிலோ மீட்டர் சுற்றளவில் தொல்பொருள் ஆராய்ச்சி இடங்கள், குடியிருப்புகள், ரயில்வே பாதை, தேசிய, மாநில, ஊராட்சி சாலைகள் உள்ளிட்ட விவரங்களும் இல்லை. நிலப் பயன்பாடும் குறிப்பிடப்படவில்லை.

நீர் மற்றும் ஒலி ஆய்வு மற்றும் உயிரியல் சூழல் பற்றிய ஆய்வு, சமூகப் பொருளாதாரச் சூழல் பற்றிய ஆய்வுகள் விரிவாக இல்லை, கல்குவாரி இயக்கப்படுவதால் எதிர்பார்க்கப்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் அதைத் தணிப்பதற்கான நடவடிக்கை விவரங்கள் மேலோட்டமாக மட்டுமே உள்ளது. இவ்வாறு சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டம் வெற்று வார்த்தைகளாக உள்ளன. தேவையான விவரங்கள் இல்லை. மொத்தத்தில் மொரட்டுப்பாளையம் 11 கல்குவாரி சுரங்கங்களின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை வைத்து எந்த விவரமும் அறிய முடியாது. எனவே இந்த அறிக்கையை மையப்படுத்தி நடத்தப்பட்ட கருத்துக் கேட்புக் கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 11 கல்குவாரிகளுக்கு ஒரே அறிக்கையாகக் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கல்குவாரிக்கும் தனித்தனி அறிக்கை கொடுக்கப்படவில்லை.

தொல்லியல் இடங்கள் மறைப்பு:

குவாரிகள் அமையும் பகுதியைச் சுற்றி 10 கிலோ மீட்டர் தொலைவில் ஊத்துக்குளி கதித்தமலை முருகன் கோயில் அமைந்துள்ள மலை முழுக்க வனத்துறையின் காப்புக் காடுகள்தான். பெரியபாளையம் கோயில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வரலாற்றுச் சின்னமாகும். இவர்கள் திரையிட்டுக் காட்டியுள்ள வரைபடத்தில் 10 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள ஊர்களில் கொடுமணல் ஊராட்சி குப்பம்பாளையத்தையும், ஓலப்பாளையத்தையும் காட்டியுள்ளனர். ஆனால், தற்போது தொல்லியல் ஆய்வு நடைபெற்று வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க கொடுமணல் காட்டாமல் மறைக்கப்பட்டுள்ளது.

மாசு கட்டுப்பாட்டு வாரிய விதிமுறைப்படி ஏதேனும் திட்டம் தவறாகக் காட்டப்பட்டிருந்தாலோ, மறைக்கப்பட்டிருந்தாலோ இந்த திட்டத்தை ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளதால், மொரட்டுப்பாளையம் 11 கல்குவாரி சுரங்கங்களின் கருத்துக் கேட்புக் கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும்''.

இவ்வாறு விவசாயிகள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியர் சு.வினீத் உறுதியளித்ததாக பசுமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தினர் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x