Published : 07 Sep 2021 03:13 AM
Last Updated : 07 Sep 2021 03:13 AM

பெரியார் பிறந்த செப்.17-ம் தேதி சமூகநீதி நாளாக அறிவிப்பு- முதல்வர் ஸ்டாலினுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பாராட்டு

சென்னை

பெரியார் பிறந்த நாளான செப்.17-ம்தேதி சமூகநீதி நாளாகக் கொண்டாடப்படும் என்று அறிவித்த முதல்வர் ஸ்டாலினுக்கு அரசியல் தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள்நேற்று வெளியிட்ட அறிக்கை:

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி: காலங்காலமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சம உரிமை,சம வாய்ப்பு பெற்றுத் தருவதற்காக தனது வாழ்வையே அர்ப்பணித்தவர் பெரியார். அவரது பிறந்த நாளான செப்.17-ம் தேதி சமூக நீதி நாளாகக் கடைபிடிக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருப்பது ஒரு கூடுதல் மைல்கல். வரலாற்றின் ஜீவ நதியாம் பெரியாருக்கு காணிக்கையாக்கப்பட்ட அண்ணாவின், கருணாநிதியின் திராவிட ஆட்சி எப்படி நன்றி உணர்ச்சியின் நாயகமாக மிளிர்கிறதோ, அதேபோல முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆட்சியும் சமூகநீதி பிரகடனத்தைச் செய்துள்ளது. முதல்வர் ஸ்டாலினை இனி, ‘சமூக நீதிக்கான சரித்திர நாயகர்’ என்று அழைக்க வேண்டியது காலத்தின் கட்டளை.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு. கல்வி, வேலைவாய்ப்புகளை வழங்கும் சமூகநீதிக்கொள்கை, உயர் நீதிமன்றத்தாலும், உச்ச நீதி மன்றத்தாலும் முடக்கப்பட்டபோது, அதை எதிர்த்து மக்களை அணி திரட்டிப் போராடி, முதன்முதலாக இந்திய அரசு அமைப்புச் சட்டத்தைத் திருத்தம் செய்து, சமூகநீதி காத்தமாபெரும் தலைவர் பெரியார். பெண் அடிமை ஒழிப்பு, தொழிலாளர் மேம்பாடு, சாதி ஒழிந்த சமத்துவ நிலை, சுயமரியாதை ஆகிய சமூகநீதிக் கொள்கைகளுக்காக, விழிமூடுகிற வரை, களத்தில் நின்றுபோராடிய பெரியாரின் பிறந்த நாள்,சமூகநீதி நாளாக அறிவிக்கப்பட்டிருப்பது பொருத்தமானது.

பாமக நிறுவனர் ராமதாஸ்: சமூகநீதி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.1987-ல் பெரியார் பிறந்த நாளான செப்.17-ம் தேதிதான் சமூகநீதி கேட்டு ஒரு வாரம் தொடர் சாலைமறியல் போராட்டத்தை தொடங்கினோம். அந்த நாளில்தான் சமூக நீதிக்காக போராடிய மாவீரர்கள் சுட்டு கொல்லப்பட்டனர். பாமகவை பொறுத்தவரை செப்.17 தான் சமூகநீதி நாள். பெரியாரின் பிறந்த நாளைசமூகநீதி நாளாக அறிவிக்க வேண்டும் என்று பாமக தொடர்ந்துவலியுறுத்தி வந்தது. இதை தமிழகஅரசு நிறைவேற்றியது மகிழ்ச்சி.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: வர்ணாசிரமத்தையும், சாதிய ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்தும் சமூகநீதியை நிலைநாட்டவும், பெண்ணடிமைத்தனத்துக்கு எதிராகவும், பகுத்தறிவு பிரச்சாரத்தையும் தமிழகத்தில் தன் வாழ்நாள் முழுவதும் லட்சியப் பணியாக மேற்கொண்டவர் பெரியார். இவரது பிறந்தநாளை சமூகநீதி நாளாக கொண்டாடுவது சால சிறந்ததாகும்.

பாஜக தலைவர் அண்ணாமலை: (தருமபுரியில் செய்தியாளர்களிடம் கூறியது:) பெரியார் பிறந்த தினம் இனி ஆண்டுதோறும் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதை பாஜக வரவேற்கிறது. அதேநேரம், பெரியாருக்கு முன்னதாகவே தமிழகத்தில் சமூக நீதிக்காக பாடுபட்ட, போராடிய பாரதியார், வ.உ.சி. போன்ற தலைவர்களை திமுக மறந்துவிட்டது. திமுக தொடங்கப்பட்ட பின்னர் செயல்பட்ட தலைவர்கள் மட்டுமே அக்கட்சியின் பார்வைக்கு தெரிகிறது. இதை தவிர்த்து, அனைத்து தலைவர்கள் தொடர்பான தகவல்களையும் இளைய தலைமுறையினருக்கு அரசு கொண்டு சேர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x