Published : 07 Sep 2021 03:13 AM
Last Updated : 07 Sep 2021 03:13 AM

பட்டு, பாலிவஸ்திரா, பனை பொருட்கள் குறித்து கண்காட்சி; கதர் நூற்போர், நெசவாளர் வாரியம் சீரமைக்கப்படும்: பேரவையில் கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்தி அறிவிப்பு

கதர், பாலிவஸ்திரா, பட்டு ரகங்கள்,பனை பொருட்கள் குறித்து தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்யப்படும். கதர் நூற்போர், நெசவாளர் நல வாரியம் மறுசீரமைக்கப்படும் என்றுபேரவையில் கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்தி அறிவித்தார்.

சட்டப்பேரவையில் கைத்தறி, துணி நூல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்றுநடந்தது. இதற்கு பதில் அளித்துப்பேசிய கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்தி வெளியிட்ட அறிவிப்புகள்:

கதர், பாலிவஸ்திரா, பட்டு ரகங்களின் சிறப்புகளை பொதுமக்கள் அறிந்துகொள்ள மாநிலத்தின் முக்கிய நகரங்களில் விழிப்புணர்வு, கண்காட்சி முகாம்கள் நடத்தப்படும். தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்களான இன்ஸ்டாகிராம், முகநூல், யூ-டியூப் மூலம் மக்களுக்கு விளம்பரப்படுத்துவது போன்ற பணிகள்ரூ.20 லட்சத்தில் மேற்கொள்ளப்படும்.

திருவண்ணாமலை கதர் அங்காடி கட்டிடம் ரூ.44 லட்சத்தில் சீரமைக்கப்படும். கதர் நூற்போர்,நெசவாளர் நல வாரியம் மறுசீரமைப்பு செய்து புத்துயிர் அளிக்கப்படும். கிராமப் பொருட்களுக்கான புதிய மேலுறைகள், பட்டுப் புடவைகளுக்கான அட்டைப் பெட்டிகள் ரூ.4 லட்சத்தில் உருவாக்கப்படும். கதர் பட்டு நெசவாளர்களுக்கு ரூ.15 லட்சத்தில் நவீன முறையில் புதிய வடிவமைப்புகளை உருவாக்கி, திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும்.

திருநெல்வேலி - தூத்துக்குடி மாவட்ட பனை பொருள் விற்பனை கூட்டுறவு சம்மேளன அலுவலக வளாகத்தில், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பதநீரைக் கொண்டு சுத்தமான பனை வெல்லம் உற்பத்தி செய்ய, பொது பயன்பாட்டு மையம் ரூ.40 லட்சத்தில் நிறுவப்படும். இதனால் அங்கு உள்ள பனை தொழிலாளர்கள் பயனடைவார்கள்.

பனை பொருட்களை நவீன முறையில் பேக்கிங் செய்து, விற்கரூ.16.50 லட்சத்தில் புதிய இயந்திரங்கள், கருவிகள் கொள்முதல் செய்து நிறுவப்படும். பனை வெல்லம், பனங்கற்கண்டு, சுக்கு காபிதூள், பனஞ்சீனி, பனங்கற்கண்டு மிட்டாய் போன்ற பொருட்களின் சிறப்புகளை மக்கள் அறிந்துகொள்ள முக்கிய நகரங்களில் விழிப்புணர்வு, கண்காட்சி முகாம்கள் நடத்தப்படும். தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்கள் மூலம் இதற்கான விளம்பரப் பணிகள் ரூ.15 லட்சத்தில் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x