

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மானக் கழகத்துக்கும், இந்திய மரபுசாரா எரிசக்தி மேம்பாட்டு நிறுவனத்துக்கும் இடையே, தமிழகத்தில் மின் உற்பத்தித் திறனை மேம்படுத்த புதிய திட்டங்கள், நவீன தொழில்நுட்ப முறைகளை கையாளுதல் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நேற்றுகையெழுத்தானது.
ரூ.1,32,500 கோடி நிதி தேவை
இத்திட்டங்களை செயல்படுத்த ரூ.1,32,500 கோடி நிதி தேவைப்படும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்திய மரபுசாரா எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம், மரபுசாரா எரிசக்தி துறையில் திறன் படைத்த நிறுவனங்கள் கையாளும் உத்திகளை ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கும். மேலும், இந்திய மரபுசாரா எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம், சந்தை ஆய்வு, திட்டமேம்படுத்துதல், ஒப்பந்தப் புள்ளிகள் மேலாண்மை, அமலாக்கம் ஆகியவை தொடர்பாக தனது மேம்பட்ட ஆலோசனைகளை தமிழ்நாடு மின்உற்பத்தி, பகிர்மானக் கழகத்துக்கு வழங்கும்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில்பாலாஜி, சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், எரிசக்தி துறைச் செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், மின் உற்பத்தி, பகிர்மானக் கழக தலைவர் ராஜேஷ் லக்கானி, இந்திய மரபுசாரா மேம்பாட்டு நிறுவன தலைவர் பிரதீப் குமார் தாஸ், இயக்குநர் சிந்தன் நவீன்பாய் ஷா,துணை மேலாளர் ஆயுஷ் கந்தல்வால் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் இந்ததகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.