

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனாநோயாளிகளுக்காக ஏற்கெனவே 2 ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இம்மையங்கள் மூலம் நிமிடத்துக்கு 500 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு சுமார் 200 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் தங்கு தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இம்மருத்துவமனையில் கரோனா 3-வது அலையை எதிர்கொள்ள ஏதுவாக மத்திய அரசு உதவியோடு, ரூ.2கோடி செலவில் புதிய ஆக்சிஜன்உற்பத்தி மையம் அமைக்கப்பட்டுள்ளது. நிமிடத்துக்கு 1,000 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இம்மையத்தை நேற்று ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில், திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அரசி ஸ்ரீவத்சன், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகளுக்கான இணை இயக்குநர் சாந்தி செல்வநாயகம், சுகாதாரப் பணிகளுக்கான துணை இயக்குநர் ஜவஹர்லால், மாவட்ட திட்ட செயலாளர் (கண் சிகிச்சை) பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களிடம் ஆட்சியர் தெரிவித்ததாவது:
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா 3-வது அலையை எதிர்கொள்ள 310 படுக்கைகளுடன் மருத்துவ கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
இதில் குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காகவே 110 படுக்கைகள் தயாராக உள்ளன.
அதுமட்டுமல்லாமல், தனியார்நிறுவன உதவியோடு இம்மருத்துவமனையில் டோஃபிங் அண்டு டோனிங் (DOFFING AND DONNINGUNIT) அறை நிறுவப்பட்டுள்ளது. இந்த அறை மூலம் தன்னார்வலர்கள், கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர சுகாதாரப் பணியாளர்கள் அணியும் கவச உடை 3டி பிரின்டிங் தொழில்நுட்பம் மூலம் தயார் செய்து வழங்குகிறார்கள்.
கண் சிகிச்சை மருத்துவர்கள் சிறப்பாக செயல்பட்டு கண்புரைமற்றும் இதர கண் நோய்கள் தொடர்பாக சிகிச்சை அளித்து வருகின்றனர். இதை மேலும் மேம்படுத்த அதி நவீன கண் நோய்களை கண்டுபிடிக்கும் கருவிகளும் அறுவைசிகிச்சைக்கு உரிய உபகரணங்களும் இம்மருத்துவமனைக்கு தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.