முதன்முறையாக மகாமகத்துக்கு வந்த நாக சாதுக்கள்

முதன்முறையாக மகாமகத்துக்கு வந்த நாக சாதுக்கள்
Updated on
1 min read

வடஇந்தியாவில் நடைபெறும் கும்பமேளாவின்போது, நாக சாதுக்கள், அகோரிகள், துறவிகள் திரளாக வந்து புனித நீராடி ஆசீர்வாதம் வழங்குவார்கள். இவர்கள் இமயமலை, காசி, வாரணாசி ஆகிய இடங்களில் தான் வசிப்பார்கள்.

வடஇந்தியாவில் நடைபெறும் கும்பமேளாவின் போது 48 நாட்களும் அவர்கள் தவம் இருப்பார்கள். தவமிருக்கும் இடத்தில் யாகம் நடத்தி அதில் கிடைக்கும் சாம்பலை தங்களது உடலில் இவர்கள் பூசிக்கொள்வது வழக்கம்.

கும்பகோணம் மாகமகத் திருவிழாவையொட்டி இந்தாண்டு முதன்முறையாக துறவிகள் மாநாடு நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் கலந்துகொள் வதற்கும், மகாமகக் குளத்தில் புனித நீராடுவதற்கும் நாடெங்கிலும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட துறவிகள், சாதுக்கள் வந்துள்ளனர்.

இதில், முதன்முறையாக இமயமலை, காசியிலிருந்து 15 நாக சாதுக்கள் வந்துள்ளனர். இவர்கள் கோவிந்தபுரம் பாண்டுரங்க ஆசிரமத்தின் அருகே புனித நதியான காவிரியின் துணை ஆறான வீரசோழன் ஆற்றின் கரையோரத்தில் கூடாரம் அமைத்து தங்கியுள்ளனர். அவர்களே உணவு சமைத்து சாப்பிடுகின்றனர்.

மேலும், கூடாரத்திலேயே தவமிருந்த அவர்கள் யாகம் நடத்தியதுடன், சாம்பலை உடலில் பூசிக்கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகின்றனர். பிப்ரவரி 22-ம் தேதி வரை ஆசி வழங்கும் இவர்கள், தீர்த்தவாரியன்று மகாமகக் குளத்தில் புனித நீராட உள்ளனர்.

தமிழகத்துக்கு முதன்முறை யாக வந்துள்ள இந்த நாக சாதுக்கள் கடந்த வாரம் ராமேஸ்வரம், கன்னியாகுமாரி, மதுரை மீனாட்சி அம்மன் கோயில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு வந்ததாக நாக சாதுக்களில் ஒருவரான ஜீனாகாட தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in