வருமானத்துக்கு அதிகமாக சொத்து: திண்டுக்கல் காவல் ஆய்வாளர் மீது கோவை லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு

வருமானத்துக்கு அதிகமாக சொத்து: திண்டுக்கல் காவல் ஆய்வாளர் மீது கோவை லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு
Updated on
1 min read

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, திண்டுக்கல் மாவட்டத்தில் பணியாற்றி வரும் காவல் ஆய்வாளர் மீது கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

கோவை மாவட்டக் காவல்துறை எல்லைக்குட்பட்ட, சூலூர் காவல் நிலையத்தில், கடந்த 5.2.2018-ம் ஆண்டு முதல் 15.3.2020 வரை காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவர் தங்கராஜூ. இவர், பல்லடம் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றியபோது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திருப்பூரைச் சேர்ந்த கந்தசாமி என்பவர் லோக் ஆயுக்தாவில் புகார் அளித்தார். இந்தப் புகார் லோக் ஆயுக்தாவில் பதிவும் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, சூலூர் காவல்நிலைய ஆய்வாளராகப் பணியாற்றி வந்த தங்கராஜூவைத் தெற்கு மண்டலத்துக்கு அப்போதைய டிஜிபி திரிபாதி பணியிடம் மாற்றி உத்தரவிட்டார். இதற்கிடையே, தங்கராஜூ மீது எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக, கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரும், கடந்த ஆண்டு முதல் விசாரணை நடத்தி வந்தனர்.

இன்ஸ்பெக்டர் தங்கராஜூ கடந்த 2000-ம் ஆண்டு நேரடியாக காவல் உதவி ஆய்வாளராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர், அவர் கடந்த 2014-ம் ஆண்டு ஆய்வாளராகப் பதவி உயர்வு பெற்று அரக்கோணம் காவல் நிலையத்தில் பணிபுரிந்தார். தொடர்ந்து 1.6.2015 முதல் 2.11.2017 வரை பல்லடத்திலும், 5.2.2018 முதல் 15.3.2020 வரை சூலூரிலும் ஆய்வாளராகப் பணிபுரிந்தார். பின்னர், குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து தெற்கு மண்டலத்துக்கு மாற்றப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். பின்னர், அவருக்கு பணியிடம் ஒதுக்கப்பட்டு, திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி காவல் நிலைய ஆய்வாளராக நியமிக்கப்பட்டு, பணியாற்றி வந்தார்.

இதற்கிடையே முதல்கட்ட விசாரணையைத் தொடர்ந்து, கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் எஸ்.பி. திவ்யா, கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸில் சில தினங்களுக்கு முன்னர் புகார் அளித்தார். அதில்,‘‘ இன்ஸ்பெக்டர் தங்கராஜூ கடந்த 1.1.2016 முதல் 31.12.2019 வரையிலான காலகட்டத்தில், வருமானத்துக்கு அதிகமாக ரூ.73.69 லட்சத்துக்கு சொத்து சேர்த்து உள்ளார். தங்கராஜூவின் மனைவி பூங்கொடி பெயரில் வீடு மற்றும் வங்கியில் பணம் வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது’ எனக் கூறப்பட்டு இருந்தது.

இப்புகாரின் பேரில், கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக இன்ஸ்பெக்டர் தங்கராஜூ மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் 13(2), 13 (1) (இ) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in