கோடநாடு எஸ்டேட் மேல் ட்ரோன் பறந்ததாக புகார்: காவல்துறை விசாரணை

கோடநாடு பங்களா: கோப்புப்படம்
கோடநாடு பங்களா: கோப்புப்படம்
Updated on
1 min read

கோடநாடு எஸ்டேட் மேல் ட்ரோன் பறந்ததாக புகார் எழுந்துள்ளது.

நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ம் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில், காவலாளி ஓம் பகதூர் (50) கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவத்தில் சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜித்தின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி மற்றும் குட்டி என்கிற பிஜின் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், இந்த வழக்குக்கு அரசு சார்பில் பிரத்யேகமாக ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகிய இரு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டனர். மேலும், சயான், உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால் ஆகியோரிடம் போலீஸார் மறு விசாரணையைத் தொடங்கினர்.

அரசு வழக்கறிஞர்கள், வழக்கை முழுமையாக விசாரிக்க வேண்டும். எனவே, விசாரணைக்குக் கூடுதல் அவகாசம் வேண்டும் எனத் தொடர்ந்து கோரிவந்த நிலையில், வழக்கு விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வழக்கில் சேர்க்கப்பட்ட சாட்சிகளை விசாரிக்க போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை (செப். 03) மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர், கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் நேரடியாக விசாரணை மேற்கொண்டார். மேலும், கோடநாடு எஸ்டேட்டில் நேரடியாக விசாரணை மேற்கொண்டார்.

வழக்கில் 36-வது சாட்சியாகச் சேர்க்கப்பட்ட ஷாஜி என்பவரிடம் விசாரணை நடைபெற்றது. இவர், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜித்தின் ஜாய் என்பவரின் உறவினர்.

காலை 10 மணிக்கு போலீஸார் விசாரணையை தொடங்கினர். கூடுதல் எஸ்.பி. கிருஷ்ணமூர்த்தி, ஆய்வாளர் வேல் முருகன் விசாரணை நடத்தி வந்த நிலையில், காலை 11.30 மணிக்கு எஸ்பி ஆஷிஸ் ராவத் விசாரணை நடந்து வரும் உதகை பழைய எஸ்பி அலுவலகத்துக்கு வந்தார். அவர் தலைமையில் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. மதியம் 3.30 மணியளவில் விசாரணை முடிந்தது.

அதிமுக பிரமுகர் சஜீவனின் சகோதரர் சுனில்-ஐ விசாரணைக்கு அழைத்தாக தெரிகிறது. ஆனால், அவர் விசாரணைக்கு வரவில்லை.

இந்நிலையில், கோடநாடு எஸ்டேட் மேல் தொடர்ந்து 3 நாட்களாக ட்ரோன் பறந்ததாக புகார் எழுந்துள்ளது. கோடநாடு எஸ்டேட் மேற்பார்வை அலுவலர் ராமகிருஷ்ணன், சோலூர் மட்டம் காவல்நிலையத்தில் இது தொடர்பாக இன்று புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில், சோலூர்மட்டம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in