புதுவையில் குதிரை பூட்டிய சாரட் வண்டியில் அமைச்சர் நமச்சிவாயம்: நகர்வலம் அழைத்துச் சென்ற ஆதரவாளர்கள்

புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பிறந்த நாள் வருவதையொட்டி அவரையும், அவரது மனைவியையும் சாரட் வண்டியில் அழைத்துச் சென்ற ஆதரவாளர்கள்.
புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பிறந்த நாள் வருவதையொட்டி அவரையும், அவரது மனைவியையும் சாரட் வண்டியில் அழைத்துச் சென்ற ஆதரவாளர்கள்.
Updated on
1 min read

புதுவையில் குதிரை பூட்டிய சாரட் வண்டியில் அமைச்சர் நமச்சிவாயத்தை அவரது ஆதரவாளர்கள் நகர்வலம் போல் அழைத்துச் சென்றனர்.

புதுவையில் ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் உள்துறை அமைச்சராக நமச்சிவாயம் உள்ளார். அத்துடன் பாஜக சட்டப்பேரவைக் கட்சித் தலைவராகவும் செயல்படுகிறார்.

அமைச்சர் நமச்சிவாயத்துக்கு வரும் 8-ம் தேதி 52-வது பிறந்த நாள். அமைச்சரின் ஆதரவாளர்கள் ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே பிறந்த நாள் விழாவைத் தொகுதிதோறும் கொண்டாடி வருகின்றனர். நகரம், கிராமம் என அனைத்துப் பகுதிகளிலும் பேனர்கள், கட் அவுட்டுகள், சுவர் விளம்பரங்கள், மற்றும் கோயில்களில் சிறப்புப் பூஜை , அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர்.

இதில் திருபுவனை தொகுதியைச் சேர்ந்த அவரது ஆதரவாளர்கள், அமைச்சர் நமச்சிவாயத்தை மன்னர் நகர் வலம் வருவதுபோல் குதிரைகள் பூட்டிய அலங்கரிக்கப்பட்ட சாரட் வண்டியில் அழைத்துச் சென்றனர். சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு பேண்ட் இசை முழங்க வாணவேடிக்கை மற்றும் மேளதாளத்துடன் விழுப்புரம் நெடுஞ்சாலையில் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். சாரட் வண்டிக்கு முன்பாக மன்னருக்குப் பாதுகாப்பு அளிக்கும் வீரர்கள்போல் வேல் தாங்கி அவரது ஆதரவாளர்கள் முன்னே சென்றனர்.

அமைச்சர் நமச்சிவாயத்துடன் அவரது மனைவி வசந்தியையும் அமரவைத்து அழைத்துச் சென்றனர். வழிநெடுகிலும் சாலைகளின் இருபுறமும் நின்று பூக்கள் தூவி வாழ்த்து தெரிவிக்கவும் ஏற்பாடு செய்திருந்தனர். அமைச்சர் நமச்சிவாயமும், அவரது மனைவி வசந்தியும் அதைப் பார்த்து வணக்கம் தெரிவித்தபடி, விழா பந்தலுக்குச் சென்றனர். அங்கு அமைச்சர் நமச்சிவாயம் கேக் வெட்டினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in