Published : 24 Feb 2016 09:01 PM
Last Updated : 24 Feb 2016 09:01 PM

முதல்வர் ஜெயலலிதா எங்களை விடுதலை செய்வார்: நளினி நம்பிக்கை

முதல்வர் ஜெயலலிதா எங்களை விடுதலை செய்வார் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் இருக்கிறோம் என்று நளினி கூறியுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டு கால ஆயுள் கைதியாக இருக்கும் நளினி, தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக வேலூர் மத்திய சிறையில் இருந்து பரோலில் சென்னை வந்தார்.

நளினியின் தந்தை சங்கரநாராயணன் நெல்லை விக்கிரமசிங்கபுரம் அருகேயுள்ள அம்பலவாணபுரத்தில் 23-ம் தேதி (செவ்வாய்கிழமை) உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.அவரது உடல் சென்னை கோட்டூர்புரம் எல்லையம்மன் கோயில் தெருவில் உள்ள வீட்டுக்கு இன்று காலை 6.30 மணிக்கு கொண்டுவரப்பட்டது.

தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக நளினிக்கு பரோல் வழங்கப்பட்டது. இதையடுத்து, வேலூர் மத்திய சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை அழைத்து வரப்பட்டார்.

தந்தையின் நடந்த இறுதிச் சடங்கில் நளினி கலந்துகொண்டார்.

பிறகு செய்தியாளர்களிடம் நளினி கூறுகையில், ''முதல்வர் ஜெயலலிதா எங்களை விடுதலை செய்வார் என்று மனதார நம்புகிறேன். அந்த நம்பிக்கையில்தான் நாங்கள் இருக்கிறோம்.எந்த தவறும் செய்யாத நான் 25 ஆண்டுகளாக தண்டனை பெற்று சிறையில் இருக்கிறேன். என்னை விடுதலை செய்ய வேண்டும். எங்கள் விடுதலைக்கு ராகுல் காந்தியும் ஒத்துழைக்க வேண்டும்'' என்று நளினி கூறினார்.

பிறகு நளினியை போலீஸார் வேனில் ஏற்றி வேலூருக்கு அழைத்துச் சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x