Published : 06 Sep 2021 05:53 PM
Last Updated : 06 Sep 2021 05:53 PM

மாமல்லபுரத்தில் கைவினை சுற்றுலா கிராமம்: பேரவையில் அமைச்சர் ஆர்.காந்தி தகவல்

மாமல்லபுரத்தில் கைவினை சுற்றுலா கிராமம் அமைக்கப்பட்டு வருவதாக, கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு துறை மீதான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று (செப். 06) கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, அத்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பை அமைச்சர் ஆர்.காந்தி வெளியிட்டார்.

அதில், மாமல்லபுரத்தில் கைவினை சுற்றுலா கிராமம் அமைக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம்:

"மத்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அபிவிருத்தி ஆணையம் (கைவினைப் பொருட்கள்) சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் கைவினை சுற்றுலா கிராமம் என்ற ஒரு திட்டம் ரூ.5.61 கோடி செலவில் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் (பூம்புகார்) மூலம் அப்பகுதியிலுள்ள கைவினைஞர்கள் நலனுக்காகவும், சுற்றுலா மேம்பாட்டுக்காகவும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் நோக்கம்

மாமல்லபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள தொன்மையான மற்றும் நலிந்த கைவினைஞர்களின் குடியிருப்புகளைச் சீர்செய்து, மேம்படுத்தி தேவைக்கேற்ப அழகுபடுத்தி அவர்கள் வசிக்கும் இடங்களை, சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையிலும், அவர்களிடம் நேரடியாகத் தொடர்புகொள்ள வழிவகுத்திட இத்திட்டம் உருவாக்கப்பட உள்ளது.

மேலும், மாமல்லபுரத்தைச் சுற்றியுள்ள கற்சிற்ப உற்பத்தி நிலையங்களைப் புதுப்பித்து / மேம்படுத்தி அங்கு வேலைபுரியும் கைவினைஞர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுத்து, அங்கு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகளிடம் கற்சிற்ப உற்பத்தி நிலைய உற்பத்தியாளர்கள் வணிகம் செய்திட இத்திட்டம் வழிவகை செய்யும். மேலும், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் 40 அடி உயரத்தில் ஸ்தூபி ஒன்று மாமல்லபுரத்தில் அமைக்கப்பட்டு வருகிறது.

இதன் முதல் கட்டமாக, ரூ.1.80 கோடி செலவில் மாமல்லபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கீழ்க்கண்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

* காரணை கிராமத்தில் உள்ள கைவினைஞர்களின் குடியிருப்புகள் அழகுபடுத்துதல், வர்ணம் பூசுதல் மற்றும் மேம்படுத்துதல்.

* ஐந்துரத வீதியில் உள்ள கைவினைஞர்களின் உற்பத்தி நிலையங்கள் புதுப்பித்தல் மற்றும் மேம்படுத்துதல்.

* மாமல்லபுரத்தின் நுழைவு வாயிலில் கைவினை சுற்றுலா கிராமத்துக்கான பிரம்மாண்டமான ஸ்தூபி அமைக்கப்பட்டு வருகிறது.

* கைவினை சுற்றுலா கிராமத்துக்கான விளம்பரப் பதாகைகள் மற்றும் வழிகாட்டுதல்களை பல்வேறு இடங்களில் அமைத்தல்.

* காரணை கைவினை சுற்றுலா கிராமத்துக்கான முகப்பினை அழகுபடுத்துதல்".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x