

விநாயகர் சதுர்த்தி விழாவில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி அரசியல் செய்வதாக அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.
புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''விநாயகர் சதுர்த்தியைப் பல்வேறு மாநிலங்களில் பொதுமக்களுக்கு பாதிப்பின்றி கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல ஆளுநர் தமிழிசை பாதுகாப்பாக விழா கொண்டாட அனுமதி அளித்துள்ளார். இதில் அரசியல் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் முன்னாள் முதல்வர் நாராயணசாமி குறை கூறியுள்ளார்.
நாராயணசாமி முதல்வராக இருந்தபோது, தொற்று உச்சத்தில் இருந்தபோது, காரைக்காலில் லட்சக்கணக்கில் கும்பல் கூடும் சனீஸ்வரன் கோயில் திருவிழாவை நடத்தினார். கடந்த ஆண்டு புத்தாண்டுக் கொண்டாட்டத்தையும் நடத்தி, தொற்றுப் பரவலுக்குக் காரணமாக இருந்தார்.
தமிழகத்தில் திமுக ஆட்சியில் அறிவிப்பதைப் புதுவையில் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. அதை உணர்ந்து நாராயணசாமி மத ரீதியில் மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியான அறிவிப்புகளைக் கைவிட வேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் அறிவித்த அறிவிப்புகளை 5 ஆண்டு செயல்படுத்தாத நாராயணசாமி, இப்போது பட்ஜெட் அறிவிப்புகளை 3 மாதத்தில் நிறைவேற்ற வேண்டும் என்கிறார். அவருக்கு என்ன பேசுகிறோம்? என்ன செய்கிறோம்? என்பதே தெரியவில்லை.
பெரும்பான்மையான மக்களின் விருப்பத்திற்கேற்ப விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடலாம் எனத் துணைநிலை ஆளுநர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மக்கள் மத்தியில் இது ஏன் அதிர்ச்சி அடைய வைக்கப் போகிறது? நாராயணசாமியின் தற்போதைய சந்தர்ப்பவாத கருத்துதான் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது".
இவ்வாறு அன்பழகன் தெரிவித்தார்.