

எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் நூதன முறையில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி, தமிழக அரசுக்கு சென்னை காவல்துறை பரிந்துரைக் கடிதம் அனுப்பியுள்ளது.
சென்னையில் எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரங்களில் நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரங்கள் ஜப்பானைச் சேர்ந்த ஓ.கே.ஐ. (OKI) என்ற நிறுவனத்திடம் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. இந்த இயந்திரத்தின் சென்சார் 20 விநாடிகள் மட்டும் பணத்தை சோதனை செய்யும். நாம் பணம் எடுக்கும்போது, இந்த சென்சாரை கை அல்லது வேறு ஏதேனும் பொருளை வைத்து மறைத்தால் அப்போது எடுக்கப்படும் பணத்தை அவை கணக்கில் கொள்ளாது. நாம் பணம் எடுத்த பின்னரும், நமது வங்கிக் கணக்கில் இருந்து பணம் குறையாது. ஏடிஎம் இயந்திரத்தின் இந்தக் குறையைப் பயன்படுத்தி, நாடு முழுவதும் 14 மாநிலங்களில் ஒரு கும்பல் சுமார் 5 கோடி ரூபாய் வரை கொள்ளையடித்துள்ளது.
சென்னையில் கடந்த ஜூன் மாதம் 18, 19-ம் தேதிகளில் மட்டும் தரமணி, வடபழனி, விருகம்பாக்கம், பெரியமேடு, வேளச்சேரி போன்ற இடங்களில் பல லட்சம் வரை இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டது. ஜப்பான் நிறுவனம் தயாரித்த ஏடிஎம் இயந்திரத்தில் மட்டுமே இந்தக் கொள்ளை அரங்கேறியிருப்பது தெரியவந்தது.
கொள்ளை தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நடத்திய விசாரணையில் சென்னையில் மட்டும் 21 ஏடிஎம்களில் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றிருப்பதும், 495 முறை மோசடி செய்து பணம் எடுத்திருப்பதும் தெரியவந்தது. மொத்தமாக 50 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. அதிகபட்சமாக பெரியமேடு ஏடிஎம் மையத்தில் 190 முறை 18 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது.
ஏடிஎம்களில் பணம் திருடப்பட்டது தொடர்பாக சென்னையில் மட்டும் 16 புகார்கள் கொடுக்கப்பட்டன. இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார், ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த அமீரர்ஸ், வீரேந்தர் ராபர்ட், நஜிமுஸைன், சவுக்கத் அலி ஆகிய 4 பேரைக் கைது செய்தனர். ஆனால், கொள்ளை கும்பலின் தலைவன் மற்றும் பலர் தலைமறைவாக உள்ளனர்.
இந்நிலையில், எஸ்பிஐ வங்கி ஏடிஎம் நூதனக் கொள்ளை வழக்குகளை சிபிஐக்கு மாற்றக் கோரி, தமிழக உள்துறைக்கு சென்னை காவல்துறை பரிந்துரை செய்துள்ளது. 14 மாநிலங்களில் கொள்ளை நடந்துள்ளதால் வழக்கை சிபிஐக்கு மாற்ற சென்னை காவல்துறை பரிந்துரைத்துள்ளது. சென்னை காவல்துறையின் பரிந்துரையை விரைவில் மத்திய அரசின் உள்துறைக்குத் தமிழக உள்துறை அனுப்ப உள்ளது