

தனியார் சித்த மருத்துவக் கல்லூரி மாணவிகள் 3 பேர் உயிரிழந்த வழக்கை கொலை வழக்காக சிபிசிஐடி போலீஸார் மாற்றியுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே இயங்கிவந்த எஸ்விஎஸ் சித்த மருத்துவக் கல்லூரி மாணவிகள் 3 பேர் உயிரிழந்த வழக்கு முதலில் இபிகோ 306 பிரிவின் கீழ் தற்கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கல்லூரி தாளாளர் வாசுகி, அவரது மகன் ஸ்வாகத் வர்மா, முதல்வர் கலாநிதி மற்றும் அம்பேத்கர் புரட்சி கழக நிறுவனர் பெரு வெங்கடேசன் ஆகியோரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். வாசுகியின் கணவர் சுப்பிரமணியன் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அவரை இன்னமும் கைது செய்யவில்லை.
நீரில் மூழ்கி இறக்கவில்லை
சின்னசேலம் போலீஸாரால் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது. பின்னர், சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் சில நாட்களுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்ட மாணவிகளின் பிரேத பரிசோதனை அறிக்கையில் நீரில் மூழ்கி இறக்கவில்லை என்றும் மூச்சு அடைபட்டதால் இறப்பு நிகழ்ந்ததாகவும் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து, மாணவிகள் தற்கொலை செய்ததாக பதிவான வழக்கை இபிகோ 302 பிரிவின் கீழ் கொலை வழக்காக சிபிசிஐடி போலீஸார் மாற்றம் செய்துள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.