Published : 06 Sep 2021 03:42 PM
Last Updated : 06 Sep 2021 03:42 PM

ஊரக உள்ளாட்சித் தேர்தல்; வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்கக் கூடாது: தேர்தல் ஆணையத்திடம் அதிமுக வலியுறுத்தல்

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வாக்குப்பதிவு நேரத்தை ஒரு மணி நேரம் நீட்டிக்கக் கூடாது என, அதிமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநிலத் தேர்தல் ஆணையம் இன்று (செப். 06) ஆலோசனை நடத்துவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, நண்பகல் 12 மணியளவில், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள மாநிலத் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் மாநிலத் தலைமைத் தேர்தல் ஆணையர் பழனிகுமார், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில், அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டார்.

கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

"ஊரக உள்ளாட்சித் தேர்தலை ஜனநாயக ரீதியில் நடத்தி முடிக்க வேண்டும் என வலியுறுத்தினோம். மாநிலத் தேர்தல் ஆணையமோ அல்லது இந்தியத் தேர்தல் ஆணையமோ எதுவாக இருந்தாலும், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டும்போது முன்கூட்டியே நிகழ்ச்சி நிரலை அனுப்புவார்கள். ஆனால், இப்போது அதனை அனுப்பாமல் எடுத்த எடுப்பிலேயே கருத்து கேட்டால், நாங்கள் எதுகுறித்துப் பேச முடியும்? நாங்கள் அதனை வலியுறுத்திய பிறகு, இனிவரும் காலங்களில் முன்கூட்டியே நிகழ்ச்சி நிரலை அளிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

நிகழ்ச்சி நிரலைத் தராததால் ஆரம்பத்திலேயே குழப்பம் நிலவுகிறது. இப்படி இருக்கையில், எப்படி 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலை நியாயமாக நடத்துவார்கள் எனக் கட்சிகள் அஞ்சுவது நியாயம்தான்.

எந்தக் காலத்திலும் வாக்குப்பதிவு நேரம் காலை 7 மணியிலிருந்து மாலை 6 மணிக்குள்தான் இருக்க வேண்டும். மாலை 7 மணி வரை நீட்டிக்கக் கூடாது என வலியுறுத்தினோம். அதனை, திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஒப்புக்கொண்டன. ஒரு மணி நேரம் நீடித்தால், கடைசி ஒரு மணி நேரம் வன்முறை, விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளது.

காலை 7 முதல் மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடத்தி, கடைசி ஒரு மணி நேரம் கோவிட் நோயாளிகள், விதிகளுக்கு உட்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினோம்.

வார்டு மறுவரையறை, பெண்களுக்கான இடங்கள் உள்ளிட்டவை சரியான முறையில் வரையறை செய்ய வேண்டும் என வலியுறுத்தினோம். வாக்கு எண்ணிக்கை மையங்களில் சிசிடிவி கேமரா, மூன்றடுக்குப் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்து, நியாயமான தேர்தலை நடத்த வலியுறுத்தினோம்".

இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x