வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோயில் விவகாரம்: தமிழக அரசு மீது உயர் நீதிமன்றம் அதிருப்தி
வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோயிலைச் சீரமைக்கவும், கோயில் பராமரிப்புக்குத் தொகுப்பு நிதியும் உருவாக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தமிழக அரசு மீது சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தைப் பிரித்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு, ஆட்சியர் அலுவலகம் கட்ட, வீரசோழபுரத்தில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான நிலம் தேர்வு செய்யப்பட்டு, கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன.
கோயில் நிலத்தில் ஆட்சியர் அலுவலகம் கட்டுவதை எதிர்த்து, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கட்டுமானப் பணிகளுக்குத் தடை விதித்ததுடன், நிலத்தை மதிப்பீடு செய்ய இரு குழுக்களை நியமித்தது.
இவ்விரு குழுக்களின் மதிப்பீடும் குறைவாக உள்ளதாக, மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன் குறிப்பிட்டபோது, ஆறு மதிப்பீட்டாளர்களைப் பரிந்துரைக்க அவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தப் பின்னணியில் இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று (செப். 06) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மதிப்பீட்டாளர்களைக் கண்டுபிடிக்க இயலவில்லை என, மனுதாரர் தெரிவித்தார்.
இதையடுத்து, கோயில் நிலத்தைச் சுதந்திரமாக மதிப்பீடு செய்ய ஏதுவாக, வெளி மாநிலத்தைச் சேர்ந்த மதிப்பீட்டாளர்களைப் பரிந்துரைக்க தமிழக அரசின் தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், கோயில் அறங்காவலர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி, வழக்கின் விசாரணையை செப்டம்பர் 13-ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.
முன்னதாக, சிதிலமடைந்த கோயிலைச் சீரமைக்கவும், கோயில் பராமரிப்புக்காகத் தொகுப்பு நிதி உருவாக்கவும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் நீதிபதிகள், தங்கள் உத்தரவில் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
மேலும், நிலத்துக்கான இழப்பீட்டை முதலில் தீர்மானிக்க வேண்டும் எனக் கூறிய நீதிபதிகள், நீதிமன்ற அனுமதியின்றி, கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
