

கேரள எல்லையை ஒட்டியுள்ள 9 மாவட்டங்களைக் கண்காணிப்பது சவாலாக உள்ளது என, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2018-ம் ஆண்டில் கேரளாவை அச்சுறுத்தி வந்த நிபா வைரஸ், தற்போது மீண்டும் அம்மாநிலத்தில் பரவத் தொடங்கியுள்ளது. கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயதுச் சிறுவன், நிபா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று (செப்.05) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். ஏற்கெனவே கரோனா வைரஸால் மிகப்பெரும் பாதிப்பை கேரளா சந்தித்துள்ள நிலையில், நிபா வைரஸின் தாக்கம் தென்படத் தொடங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, நிபா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, கேரள அரசுக்கு உதவுவதற்காக சிறப்புக் குழுவை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.
இந்நிலையில், கேரளாவை ஒட்டியுள்ள கோவை, கன்னியாகுமரி போன்ற எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக, தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இது தொடர்பாக, சென்னையில் இன்று (செப். 06) பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "நிபா வைரஸ் உள்ளிட்ட புதிய வைரஸ்கள் கேரளாவில் பரவத் தொடங்கி, மக்களை அச்சுறுத்தி வருகின்றன. தமிழகமும், கேரளாவும் இணைந்த 9 மாவட்டங்கள் இருக்கின்றன. இந்த 9 மாவட்டங்களிலும், நூற்றுக்கணக்கான பகுதிகளிலிருந்து தரைவழியாக அம்மக்கள் தமிழகத்துக்கு வந்துசெல்கின்றனர். 9 மாவட்ட எல்லைகளில் மக்களின் நடமாட்டத்தைக் கண்காணித்து அவர்களெல்லாம் ஆர்.டி-பி.சி.ஆர் பரிசோதனை செய்திருக்கிறார்களா, தடுப்பூசி செலுத்தியிருக்கிறார்களா என்பதை ஆராய்வது மிகக் கடினமான இலக்காக உள்ளது" எனத் தெரிவித்தார்.