பெரியார் பிறந்த தினம் இனி சமூக நீதி நாள்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

பெரியார்: கோப்புப்படம்
பெரியார்: கோப்புப்படம்
Updated on
1 min read

பெரியார் பிறந்த தினம் இனி சமூக நீதி நாளாகக் கொண்டாடப்படும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு துறை மீதான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று (செப். 06) சட்டப்பேரவையில் விதி எண்: 110-ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுப் பேசியதாவது:

"சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கி தமிழகத்தில் சமூக நீதிக்கு வித்திட்டவர் பெரியார். அவர் எழுதிய எழுத்துகள், யாரும் எழுதத் தயங்கியவை. அவர் பேசிய பேச்சுகள் யாரும் பேச பயந்தவை. அவர் நடந்த நடை, நடத்திய சுற்றுப்பயணம், மாநாடுகள் குறித்துப் பேசுவதென்றால், தமிழக சட்டப்பேரவையை 10 நாட்கள் ஒத்திவைத்துவிட்டுத்தான் பேச வேண்டும்.

பல்வேறு சமூக நீதிப் போராட்டங்களை முன்னெடுத்தவர் பெரியார். இந்தியா முழுவதும் சமூக நீதி பரவ பெரியார் அளித்த அடித்தளமே காரணம். பெரியாரின் குருகுலப் பயிற்சிதான் திமுகவை உருவாக்கியது.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம்
முதல்வர் மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம்

பெரியார் குறித்து இந்த வரலாற்றுச் சிறப்புக்குரிய அறிவிப்பை வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன். அதன்படி, பெரியாரின் பிறந்த நாளான செப்.17-ம் தேதி தமிழகத்தில் சமூக நீதி நாளாகக் கொண்டாடப்படும் என, சட்டப்பேரவை விதி எண்: 110-ன் கீழ் அறிவிக்கிறேன்.

தமிழகத்திலுள்ள தலைமைச் செயலகம் தொடங்கி, அனைத்து அரசு அலுவலகங்களிலும் சமூக நீதி நாளான செப்.17-ம் தேதி அன்று உறுதிமொழி எடுக்கப்படும்".

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in