Published : 06 Sep 2021 03:14 AM
Last Updated : 06 Sep 2021 03:14 AM

சுதந்திரப் போராட்டத் தியாகி ‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்த நாள் விழா: முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைவர்கள் மலர்கள் தூவி மரியாதை

சுதந்திரப் போராட்டத் தியாகி வ.உ.சிதம்பரனாரின் 150-வதுபிறந்த நாளையொட்டி, சென்னையில் அவரது படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.

சென்னை ராஜாஜி சாலை துறைமுகம் வளாகத்தில் உள்ள வ.உ.சி. சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அவரது சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்கள் தூவி மரியாதை செலுத் தினார்.

அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, ராஜகண்ணப்பன், மு.பெ.சாமிநாதன் மற்றும் எம்.பி.க்கள், எம்எல்ஏ-க்கள் ஆகியோரும் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.

முன்னதாக, இந்த நிகழ்ச்சிக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை, சென்னை துறைமுகத் தலைவர் ப.ரவீந்திரன், துணைத் தலைவர் எஸ்.பாலாஜி அருண்குமார் ஆகியோர் வரவேற்று, வரலாற்று சாதனைப் புத்தகத்தை வழங்கினர்.

நிகழ்ச்சியில், சென்னை துறைமுக தலைமை கண்காணிப்பு அதிகாரி எஸ்.முரளிகிருஷ்ணன் மற்றும் துறைத் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மதிமுக பொதுச் செயலர் வைகோ, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வீ.தங்கபாலு, காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவைத் தலைவர் செல்வபெருந்தகை, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், சமத்துவ மக்கள் கழகத் தலைவர் எர்ணாவூர் நாராயணன், ம.பொ.சி. அறக்கட்டளைத் தலைவர் மாதவி பாஸ்கரன் உள்ளிட்டோரும் வஉசி படத்துக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.

தமிழக செய்தி-மக்கள் தொடர்புத் துறை சார்பில் `கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார்' என்ற தலைப்பில், அவரது வாழ்க்கை வரலாறு கையேடு அனைவருக்கும் வழங்கப்பட்டது.

இந்தக் கையேட்டை முதல்வர் வெளியிட, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பெற்றுக்கொண்டார். செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன், சென்னை மாவட்ட ஆட்சியர் ஜெ.விஜயா ராணி உடனிருந்தனர்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலர் டிடிவி.தினகரன் நேற்று தனது ட்விட்டர் பதிவில் "இந்திய விடுதலைப் போரின் தன்னிகரில்லா தளகர்த்தர், தேச விடுதலையை மட்டுமே உயிர்மூச்சாகக் கொண்டு, தன் சொத்து,சுகங்களை இழந்த உன்னத தியாகி,நாட்டுக்காக சிறையில் செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழர்வ.உ.சி.யின் மகத்தான பணிகளைமனதில் நிறுத்தி, போற்றி வணங்குவோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் தனது முகநூல் பதிவில் “வ.உ.சி.க்கு இந்த நாடும், மக்களும் செலுத்த வேண்டிய மரியாதையையும், அங்கீகாரத்தையும் செலுத்துவதற்கு ஏற்ற தருணம் இது. அதைப் பயன்படுத்திக் கொண்டு, வ.உ.சி.யின் 150-வது ஆண்டு விழாவைஓராண்டுக்கு கொண்டாடுவோம். அவரது தியாகங்களை இளையதலைமுறையிடம் கொண்டுசேர் ப்போம்" என்று பதிவிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்

பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பதிவில், “வ.உ.சிதம்பரம் பிள்ளையின் பிறந்த நாளில், தொலைநோக்குப் பார்வைகொண்ட அவரை நினைவுகூர்கிறேன். நமது சுதந்திர இயக்கத்தில் அவர் முன்னோடியாகத் திகழ்ந்தார்.‌ தற்சார்பு இந்தியா குறித்து அவர் திட்டமிட்டார். குறிப்பாக, துறைமுகம், கப்பல் துறைகளில் நடவடிக்கை மேற்கொண்டார். அவரால் நாம் மிகுந்த எழுச்சி அடைகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x