Published : 06 Sep 2021 03:14 AM
Last Updated : 06 Sep 2021 03:14 AM

தாம்பரம் அருகே டிரெய்லர் லாரி மீது கார் மோதல்: 4 பொறியியல் பட்டதாரிகள் உட்பட 5 பேர் உயிரிழப்பு

தாம்பரம் அருகே டிரெய்லர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பொறியியல் பட்டதாரிகள் உட்பட 5 பேர் நேற்று உயிரிழந்தனர்.

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தாம்பரம் அருகே புதுபெருங்களத்தூரில் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் நுழைவு வாயிலில் கட்டுமானத்துக்கான இரும்பு கம்பிகளை ஏற்றி வந்த டிரெய்லர் லாரி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

அப்போது, அதிகாலையில் கார் ஒன்று அதிவேகமாக வந்து அந்த லாரியின் மீது மோதியது. அதில் அந்த கார் முழுவதுமாக டிரெய்லர் லாரியின் பின் பகுதியில் சிக்கிக் கொண்டது. இதுகுறித்து அக்கம்பக்த்தில் இருந்தவர்கள் பீர்க்கங்கரனை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாரும் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தனர். அப்போது காரில் 5 பேர் இறந்து கிடந்தது தெரியவந்தது.

இதில் கார் ஓட்டுர் நவீன் என்பவரின் உடல் மட்டும் மீட்கப்பட்டது. மற்றவர்களின் உடல் காரின் இடிபாடுகளில் சிக்கி இருந்ததால் அவற்றை எடுக்க முடியாமல் சிரமப்பட்டனர். இதைத் தொடர்ந்து தாம்பரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் வந்து உருக்குலைந்த காரின் பாகங்களை உடைத்து மற்றவர்களின் சடலங்களை மீட்டனர். மீட்புப் பணி சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது.

இறந்தவர்கள் சேலம் மாவட்டம்மேட்டூரைச் சேர்ந்த நவீன்(21), ராஜ் ஹரீஷ்(22), புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ராகுல் கார்த்திக்(22), திருச்சியைச் சேர்ந்த அஜய்(22), சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த அரவிந்த் சங்கர் (22) என்பது தெரிந்தது.

இவர்களில் நவீன் கார் ஓட்டுநர். மற்ற 4 பேரும் துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கடந்த மே மாதம் மெக்கானிக்கல் பொறியியல் பட்டப் படிப்பு முடித்தவர்கள் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இவர்களில் ராகுல் கார்த்திக், அஜய், கிழக்கு தாம்பரம் சேலையூரில் வசிக்கும் இவர்களது நண்பர் காமேஷ் ஆகியோருக்கும் இன்று (செப்.6) சென்னையில் நேர்முகத் தேர்வு நடக்க இருந்தது. இதற்காக நண்பர்களுடன் இவர்கள் சென்னை வந்துள்ளனர். நேர்முகத் தேர்வு அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. காமேஷ் இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

மற்றவர்கள் காரில் வண்டலூர் நோக்கி சென்றுள்ளனர். இவர்கள் ஜிஎஸ்டி சாலையில் வேகமாக சென்றபோது புதுபெருங்களத்தூர் அருகே டயர் வெடித்து சாலையின் வலது பக்கத்தில் சென்ற லாரி மீது லேசாக மோதி, சிறிது தூரம் ஓடி அருகில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிரெய்லர் லாரி மீது மோதியது.

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x