Published : 06 Sep 2021 03:14 AM
Last Updated : 06 Sep 2021 03:14 AM

கோவையில் வ.உ.சிதம்பரனார் பெயரில் மேம்பாலம்: உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி உறுதி

கோவை

கோவையில் வ.உ.சிதம்பரனார் பெயரில் மேம்பாலம் அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார்.

வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்த நாள் விழாவையொட்டி, கோவை மத்திய சிறையில் உள்ள வ.உ.சிதம்பரனார் இழுத்த செக்கு மற்றும் அவரது உருவப்படத்துக்கு அமைச்சர் அர.சக்கரபாணி நேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், கோவை தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன், சிறைத் துறை டிஐஜி க.சண்முகசுந்தரம், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, சிறைக் கண்காணிப்பாளர் கோ.ப.செந்தாமரைக் கண்ணன், அரசு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் அ.ஆறுமுகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின்னர் அமைச்சர் அர.சக்கரபாணி கூறும்போது, “தமிழக முதல்வர் உத்தரவுப்படி வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்த நாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இன்றைய தலைமுறையினர் அனைவரும் வ.உ.சி.யின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இவ்விழா கொண்டாடப்படுகிறது.

தனது வாழ்வில் முக்கிய நாட்களை கோவை சிறையிலேயே கழித்த வ.உ.சி.யின் முழு உருவச்சிலை, வ.உ.சி பூங்காவில் அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். வ.உ.சி.யின் புகழுக்கு மேலும் பெருமை சேர்க்கின்ற வகையில், 14 அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளார்.

கோவை நஞ்சப்பா சாலை மற்றும் ஏற்கெனவே கட்டப்பட்டுள்ள பாலங்கள் அல்லது இனிவரும் நாட்களில் கட்டப்படவுள்ள பாலங்களில் ஏதாவது ஒன்றுக்கு வ.உ.சிதம்பரனார் பெயர் சூட்டப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.

தொடர்ந்து, அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் வ.உ.சி.யின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் வகையில் அரிய புகைப்படங்கள் மற்றும் வாழ்க்கை குறிப்பு தொகுப்புகள் அடங்கிய பேருந்து சேவையை அமைச்சர் அர.சக்கரபாணி தொடங்கி வைத்தார். இப்பேருந்து பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு பயணிக்க உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x