

விளைநிலங்களுக்கு பதிலாக தேசிய நெடுஞ்சாலையையொட்டி எரிவாயு குழாய் பதிப்பதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறிய, தமிழக அரசு நியமித்துள்ள நிபுணர் குழுவுடன் இணைந்து ஒத்துழைக்கும்படி கெயில் நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமருக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
திருப்பூர், ஈரோடு, கோவை, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங் களின் வழியே கொச்சி - பெங்களூரு இடையே எரிவாயு குழாய் பதிக்கும் பிரச்சினை பற்றி தங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். இத்திட்டம் தற்போதைய நிலையில் செயல்படுத்தப்பட்டால், இந்த 7 மாவட்டங்களில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகளின் விளைநிலங்களுக்கும், சொத்து களுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு ஏற்படும். இத்திட்டத்தில் உள்ள இடையூறுகள், ஆபத்துகள் மக்கள் மத்தியில் குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, கடந்த 2013 மார்ச்சில் பொதுமக்களிடம்
இத்திட்டம் தொடர்பாக கருத்து கேட்பு கூட்டங்களை அரசு தலைமைச் செயலாளர் நடத் தினார். அப்போது 7 மாவட்ட விவசாயிகளும் இத்திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இத்திட்டத்தால் ஏற்படும் பிரச்சினைகளை அரசு கவனமாக ஆய்வு செய்தது.
தமிழகத்தில் 310 கி.மீ. தொலைவுக்கு 20 மீட்டர் அகலத்தில் எரிவாயு குழாய் அமைக்கும் இத்திட்டத்தால் லட்சக்கணக்கான மா, பலா, தென்னை மரங்கள் கடுமையாக பாதிக்கும். குழாய் பதிப்பதற்காக நிலத்தைத் தோண்டும் பகுதிகளில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பழவகை மரங்களை வெட்ட வேண்டியதிருக்கும். உயர் நீதிமன்ற உத்தரவின்படி, ஒரு மரம் வெட்டப்பட்டால், அந்த இடத்தில் குறைந்தபட்சம் 10 மரங்களையாவது நட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சுமார் 12 லட்சம் மரங்களை நட வேண்டும். அது கெயில் நிறுவனத்தால் இயலாத ஒன்றாகும்.
மேலும், எரிவாயு குழாய் பதிக்கும் பகுதியில் குளம், கிணறு போன்றவற்றைத் தோண்டு வதற்கு விதிக்கப்படும் கட்டுப்பாடு களால் விவசாயம், தோட்டக் கலைக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். இப்பிரச்சினையில் தொடர் புடைய அரசு, மத்திய அரசுதான் என்று உச்ச நீதிமன்றம் சுட்டிக் காட்டியிருப்பதால், தாங்கள் விரைந்து தலையிட்டு கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
தமிழகத்தின் 7 மாவட்டங் களையும் உள்ளடக்கி, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின், பெட் ரோலியம் மற்றும் கனிம குழாய்கள் நிலம் கையகப்படுத்தும் சட்டம் 1962, பிரிவு 3-ன் கீழ், கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் 5-ம் தேதியிட்ட அறிவிக்கை, அதே ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி, 2012-ம் ஆண்டு ஜனவரி 4-ல் வெளியிடப்பட்ட அறிவிக்கைகள், அதன்பின்னர் வெளியிடப்பட்ட அனைத்து அறிவிக்கைகளையும் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.
இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எட்டப்படும் வரை மத்திய அரசின் அறிவிக்கைகளை செயல்படுத்தக்கூடாது என்று கெயில் நிறுவனத்துக்கு பிரதமர் உத்தரவிட வேண்டும். 1962-ம் ஆண்டு பெட்ரோலியம் மற்றும் கனிம குழாய்கள் சட்டத்தில் தேவையான திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும்.
தலையிட வேண்டும்
தேசிய நெடுஞ்சாலையை யொட்டி எரிவாயுக் குழாய்கள் பதிக் கும் சாத்தியக்கூறுகள் பற்றி ஆய்வு செய்ய தமிழக அரசு அமைத்துள்ள நிபுணர் குழுவில் கெயில் நிறுவனம் இடம்பெற உத்தரவிட வேண்டும். இதனால் தேசிய நெடுஞ்சாலை வழியாக எரிவாயு குழாய்கள் பதிப்பதற்கான தீர்வை வழங்கும். எனவே, இப்பிரச்சினையில் தாங்கள் உடனடியாகத் தலையிட வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.